பயங்கரவாதத்துக்கான அதிகாரசபையாக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள பேராசிரியர் ரொஹான் குணரத்ன முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேலிய-இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு முன் பாராமுகமாக இருந்து விட்டு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் இல்லாவிட்டால், மற்றொரு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடக்கும் என எச்சரித்து பித்தலாட்டம் ஆடியிருக்கிறார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஜூலை 28 இல் நடைபெற்ற ‘இலங்கையின் ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகள்: சர்வதேச சமூகத்திற்கான பாடங்கள்’ என்ற நூலை வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் எந்த அரசியல் சதியும் இல்லை” என்று கூறிய அவர், புத்தியுள்ள இலங்கையர்கள் தம்மை நம்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இஸ்லாத்தை வன்முறையுடன் தொடர்புபடுத்தும் விஷம ஊடகப் பிரச்சாரமும், அமைதியை விரும்பும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே.
மே 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தலில் வெளிப்படையாகவே ஈடுபட்ட இனவாதக் கூறுகளுக்கு தொடர்ந்தும் வாய்ச்சவடால் விடுவதற்கு உத்தியோகபூர்வ அனுசரணை வழங்கப்பட்டிருந்ததும் பரகசியமே.
நாம் வாழும் அதே கிரகத்தில் தான் பேராசிரியர் குணரத்ன வாழ்கிறார் என்றால், சிங்களவர்களை பயமுறுத்தி சிங்கள மேலாதிக்க அரசாங்கத்தை நிறுவ இனவாத சக்திகளால் மிக நுணுக்கமாக திட்டமிட்டு, செயல்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்கும் தீவின் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.
உள்ளூர் ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, அரச முகவர்களின் சம்பளப் பட்டியலில் இருந்த ஒரு சில முஸ்லீம் நபர்கள் இந்த குற்றத்தை செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போது துன்புறுத்தலுக்கு ஆளான முஸ்லிம்கள், அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில் தாம் நல்ல நிலையில் இல்லை என்பதை உணர்த்துவதற்காக 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரி – ரணில் அரசாங்கத்திற்கு வாக்களித்தனர்.
அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் மீது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் சிலதை பேராசிரியர் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தது போல தாக்குதல் குறித்து ஆதாரங்கள் மூலம் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி சிறிசேன உடனடியாகச் செயற்பட்டிருந்தால் ஈஸ்டர் ஞாயிறு படுகொலையைத் தவிர்த்திருக்கலாம்.
இந்த படுகொலைக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவுக்குத் தெரியும்.
மேலும் அவர் முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசல்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களில் எல்லாம் தேடுதல் நடத்துவதற்கு படைகளை அனுப்பினார்.
முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் காவலில் வைக்கப்பட்டு, நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பள்ளிவாசல்களில் நடத்தப்படும் பிரசங்கங்களின் நகல்களை அரசாங்கத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூட அரசாங்கம் உத்தரவிட்டது.
ஒவ்வொரு முஸ்லீம் ஆண், பெண், குழந்தைகள் மீது கூட எல்லா இடங்களிலும் சந்தேகமும், வெறுப்பும் கசப்பும் உமிழப்பட்டது. தேடுதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பீதியில் இருக்கும் அப்பாவி முஸ்லிம் குடும்பங்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது.
கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளிலும் மற்றும் மருத்துவமனைகளிலும் கூட முஸ்லிம் பெண்கள் தாம் பாரம்பரியமாக அணிந்து வந்த முக்காடுகளை அகற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டது.
பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் முஸ்லிம்களின் எதிர்ப்பையும் மீறி நாய்களுடனும் பூட்ஸ் கால்களுடனும் படையினர் நுழைந்தனர். உலக முஸ்லிம்களுக்கு அல்குர்ஆனை விட புனிதமானது வேறு எதுவும் இல்லை.
முஸ்லீம்கள் எப்பொழுதும் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டே அல் குர்ஆனை ஓதுவார்கள். இந்தப் புனித குர்ஆனின் பிரதிகள் உள்ளிட்ட அரபு மொழியில் எழுதப்பட்ட அனைத்தையும் ஆத்திரமூட்டும் வகையில் வேண்டுமென்றே கிழித்தெறிந்தார்கள்.
படுகொலை நடந்து மூன்று நீண்ட வாரங்களுக்கு முஸ்லிம் வீடுகளும் கடைகளும் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி சல்லடை செய்யப்பட்டு அவற்றிலிருந்த சமயலறைக் கத்திகள் கூட எடுத்துச் செல்லப்பட்டன.
ஒழுங்கமைக்கப்பட்ட இனவெறியர்கள் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் வீடுகள், மசூதிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற இடங்களுக்கு தீ வைக்கத் தொடங்கினர். இது பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு மற்றும் ஒத்துழைப்பின் கீழ் நடத்தப்பட்டது.
புனித மாதமான ரமலான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் தங்களைக் காத்துக் கொள்ள அருகிலுள்ள காடுகளுக்கும் நெல் வயல்களுக்கும் ஓட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள்.
நாத்தாண்டிய, கொட்டாரமுல்லைச் சேர்ந்த தளபாடக் கடை உரிமையாளர் எம்.எஸ்.பௌசுல் அமீன் (49), நோன்பு துறப்பதற்காக தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி வாளால் வெட்டினர். ஃபௌசுல் தரையில் வீழ்ந்தபோது அந்த கும்பல் அவரது முகத்தில் டர்பெண்டைனை ஊற்றினர். அவரது 16 வயது மகன் அஜ்மீர் வாயடைத்து நின்றார்.
குருநாகல், ஹெட்டிபொல மற்றும் பல இடங்களில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்கள் பற்றி அரசாங்கம் அறிந்திருந்தும், தடுக்க எதுவும் செய்யவில்லை.
இத்தகைய பயங்கரமான சூழ்நிலையில், திட்டமிட்ட கொலைகார குண்டர்களிடம் முஸ்லிம்களை விட்டுவிட்டு அனாவசியமான மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி சிறிசேன சீனாவுக்கு புறப்பட்டார்.
அவர் நாட்டை விட்டு வெளியேறியதும் மே 13 திங்கட்கிழமை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. இரும்புக் கம்பிகள், வாள்கள், தடிகளுடன் சுமார் 500 பேர் கொண்ட கும்பல் பொலிசார் மற்றும் இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் தங்கள் தீ வைக்கும் படலத்தை ஆரம்பித்தது. இராணுவம் அவர்களின் முன்னால் கைப்பொம்மையாகியது. வீடுகளும், கடைகளும், வணிக நிறுவனங்களும் பள்ளிவாசல்களும் தீக்கிரையாகின. சுமார் 30 முஸ்லிம் கிராமங்களில் சுமார் 500 கட்டடங்களை அவர்கள் எரித்து அழித்தார்கள்.
நோன்பு நோற்றிருந்த முஸ்லிம் பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு பாதுகாப்புக்காக சிங்கள அண்டை வீட்டாரிடம் ஓடினார்கள்.
சிலர் தங்கும் வசதியும், உணவும் கூட வழங்கினர். இன்னும் சிலர் உதவ மறுத்தனர். கடுமையாகத் தாக்கப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட ஒரு முஸ்லிமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிங்கள முச்சக்கர வண்டி சாரதிகள் மறுத்துவிட்டனர். இதில் அவர் உயிரிழந்தார்.
தீக்கிரையாக்கப்பட்ட சுமார் 30 கிராமங்களிலும் முஸ்லிம்களின் அவல நிலை இதுதான். ஜனாதிபதி சிரிசேனவின் இந்த அர்த்தமற்ற தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் புண்ணியத்தில் பல இலட்சாதிபதி வணிகர்கள் ஒரே இரவில் ஏழைகளாக்கப்பட்டனர்.
சீனாவில் இருந்து நாடு திரும்பியும் ஜனாதிபதி சிறிசேனவிடம் இருந்து எந்த வார்த்தையும் வெளிவரவில்லை. மாறாக கலகொடஅத்தே ஞானசார தேரரை அவரது சிறைச்சாலையில் சென்று சந்தித்ததோடு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையும் செய்து உபசரித்தார்.
அன்றாட வாழ்க்கையே முஸ்லிம்களுக்கு சிம்ம சொப்பனமாகியது. முஸ்லிம்களை அரக்கர்களாக்கல், அந்நியப்படுத்துதல் மற்றும் முஸ்லிம்கள் மீது முற்றுகையிடப்பட்ட மனநிலையை வளர்த்தல் போன்றவற்றின் ஊடாக துன்புறுத்தலும் பாரபட்சமும் நன்கு திட்டமிடப்பட்ட வெறுப்பு பிரச்சாரமும் பொது வெளியில் கட்டமைக்கப்பட்டது.
இலங்கையில் இனவாதத்துக்கு புதிய அர்த்தம் கற்பிக்கப்பட்டது. மேலும் அனைத்து விடயங்களிலும் விவகாரங்களிலும் முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டார்கள். பொது இடங்கள், பேருந்துகள், ரயில்கள், டாக்சிகள் மற்றும் பணியிடங்களில் கூட முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக துன்புறுத்தப்பட்டனர்.
இந்தச் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக ஊடகங்கள், முஸ்லிம்களுக்கு எதிராக அப்பாவி சிங்கள மக்களின் மனங்களில் விஷமூட்டும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டன.
கலாநிதி ராஜன் ஹூலின் “Sri Lanka’s Easter Tragedy – When THE DEEP STATE GETS OUT OF ITS DepTH” என்ற புத்தகத்தின்படி,முஸ்லிம்களின் பூர்வீகத்தையே பூதாகரமாக்கி 1948 இல் இலங்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் செய்தது போல் அவர்களை நாடற்றவர்களாக மாற்றுவதே இதன் இறுதி இலக்கு என்பது தெளிவாகிறது.
அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன செய்தியாளர்களிடம் கூறுகையில், “வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன எனக் கூறியுள்ளார். சேதம் ஏற்பட்டு அப்பாவி உயிர்களும் பலியாகிய பின்னர் விஷேட புலனாய்வுக் குழுக்களாலும் விசாரணைகளாலும் என்ன பயன் என்பதுதான் இப்போது கேள்வி.