கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை பிரதேச செயலாளருக்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்தை பிக்குகள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணிக்கு முதல் குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக வெறுகல்-நாதன்ஓடை பிரதேசத்திலும் போராட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
குறித்த விகாரை நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் இன முறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதனையடுத்து, இனங்களுக்கிடையில் இனமுறுகல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் முகமாக ஆரம்பிக்கவிருக்கும் குறித்த விகாரையின் நிர்மாணப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததற்கமைய விகாரையின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.