மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டிகள் ஆகஸ்ட் 25 முதல் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை புனித மக்க மாநகரில், மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இவ்வருடம் அதன் 43 ஆவது சுற்று நடைபெறுவதுடன் குறித்த போட்டியில் இதுவரை 6616 ஹாபிழ்கள் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த போட்டியில் 117 நாடுகளிலிருந்து 166 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அல்ஹாபிழ் எம்.எஸ்.எம். ஸாஜித் கலந்துகொள்கிறார்.
இவர் மல்வானையைச் சேர்ந்தவர், தற்பொழுது கல்ஹின்னையில் அமைந்துள்ள அல் பஃத்தாஹிய்யா அரபுக் கல்லூரியில் கல்வியைத் தொடர்கின்றார். அவர் போட்டியின் மூன்றாம் பிரிவில் போட்டியிடவுள்ளார். அதாவது அல்குர்ஆனை முழுமையாக தஜ்வீத் சட்டங்களைப் பேணி மனனமிடும் பிரிவு.
உலக நாடுகளிலேயே அல்குர்ஆனை மனனமிடுவதிலும், ஏனைய நாடுகளில் உள்ள முஸ்லிம்களை அதன் பால் தூண்டக்கூடிய நாடுகளின் பட்டியலிலும் சவூதி அரேபியா முன்னிலை வகிக்கின்றது.
அந்த அடிப்படையில் பல பெயர்களில் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டிகள் சவூதி அரேபியாவில் நடந்த வண்ணம் உள்ளன, அவற்றுள் மிக முதன்மையான சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டி மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டியாகும்.
இந்தப்போட்டியின் நோக்கம், முஸ்லிம்களை அல்குர்ஆனுடன் தொடர்பு படுத்தி, உலக முஸ்லிம்களுக்கு இடையே அல்குர்ஆனை மனனம் செய்யும் விடயத்தில் போட்டி தன்மையை ஏற்படுத்தி, சவூதி அரேபியாவின் (அல்குர்ஆனுடனான பலதரப்பட்ட தொடர்புகளையும் உறுதிப்படுத்துவதுமாகும்.