“பாஜகவின் வகுப்புவாத, ஊழல், கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி”:பா.ஜ.கவினை பட்டியலிட்டு விமர்சித்த ஸ்டாலின்

Date:

முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், “CAG எழுப்பிய 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகளும் பிரதமரின் மவுனமும்” என்ற தலைப்பில்  (23) வெளியிட்டுள்ள SPEAKING FOR INDIA பொட்காஸ்ட் சீரிசின் இரண்டாவது அத்தியாயம்  வெளியாகியுள்ளது.

“CAG எழுப்பிய 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகளும் பிரதமரின் மவுனமும்” என்ற தலைப்பில் Speaking For India Podcast வடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை 4 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

SPEAKING FOR INDIA பாட்காஸ்ட் சீரிசில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு,

“இந்தியாவுக்காகப் பேசுவோம் – 2

இந்த Speaking for India பாட்காஸ்ட்டின் முதல் எபிசோடுக்குப் பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா தொடக்கம் ஆகியவற்றை முடித்துவிட்டு, இப்போது உங்களிடம் பேசுகிறேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கிய உடன், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தாய்மார் கேட்கிற மாதிரியான பதிவு அது, “எங்க முதல்வர் சொன்ன ஆயிரம் ரூபாய் வந்தாச்சு, பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு?” இது தமிழ்நாட்டில் வைரல் ஆகிவிட்டது.

நம்முடைய நாடும் நாட்டு மக்களும் மீண்டும் பா.ஜ.க.விடம் ஏமாந்துவிடக் கூடாது என்றுதான் இந்த Speaking For India பாட்காஸ்ட் சீரிஸ்-ஐ தொடங்கியிருக்கிறேன்.

2014-ஆம் ஆண்டு ஏமாந்தது போல்-

2019-ஆம் ஆண்டு ஏமாந்தது போல்-

2024-ஆம் ஆண்டும் நாடு ஏமாந்துவிடக் கூடாது.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்புகுஜராத் மாநிலத்தை முன்னேற்றி, அங்கே தேனாறும், பாலாறும் ஓடுவதுபோல பொய்ச் செய்திகளை பரப்பி, அதன் மூலமாக, தன்னை வளர்ச்சியின் நாயகனாக காட்டிக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

“60 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்திருக்கிறது. எனக்கு 60 மாதம் கொடுங்கள். நான் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன்” என்று சொன்னார் மோடி அவர்கள்.

அவருக்கு 60 மாதம் மட்டுமில்லை, கூடுதலாக, இன்னொரு 60 மாதம் ஆட்சி செய்கிற அளவிற்கு வாய்ப்பை இந்திய மக்கள் வழங்கினார்கள். வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டாரா? என்பதுதான் அவர் பதில் சொல்ல வேண்டிய கேள்வி. எந்த வகையில் எல்லாம் இந்தியாவை வளர்த்திருக்கிறார் என்று பட்டியல் போட அவரால் முடியுமா?

5 T-தான் எனக்கு முக்கியம் என்று முதல் முறை பிரதமர் ஆனபோது நரேந்திரமோடி அவர்கள் சொன்னார்.

1. Talent – திறமை,

2. Trading – வர்த்தகம்,

3. Tradition – பாரம்பரியம்,

4. Tourism – சுற்றுலா,

5. Technology – தொழில்நுட்பம்

– இந்த 5 T-யில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? என்னைப் பொறுத்தவரையில், 5 C-க்கள் கொண்டதாகத்தான் இன்றைய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது.

1. Communalism- வகுப்புவாதம்,

2. Corruption – ஊழல் முறைகேடுகள்,

3. Corporate Capitalism – மூலதனக் குவியல்,

4. Cheating – மோசடி,

5. Character Assassination – அவதூறுகள்

இந்த 5 C-க்கள் கொண்ட ஆட்சி இது. இப்படித்தான் சொல்ல முடியும். இதை இதுவரை விளம்பர வெளிச்சங்கள் மூலமாக பா.ஜ.க. மறைத்து வந்தது. ஆனால் இப்போது உருவான இந்தியா கூட்டணியும், இந்தியா கூட்டணித் தலைவர்களின் பரப்புரையும் பா.ஜ.க. கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி என்ற பிம்பத்தை முகத்திரையை கிழித்துவிட்டது.

இதை நாங்கள் அரசியலுக்காக சொல்லவில்லை. உண்மையான தரவுகளின் அடிப்படையில்தான் சொல்கிறோம் என்று சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்திவிட்டது. இந்தியா கூட்டணியைப் பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என்று குற்றம் சாட்டுகிற மோடி அவர்களே!

உங்கள் ஆட்சியைப் பற்றி சி.ஏ.ஜி. அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப் பார்த்தீர்களா? இதைப் பற்றி சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதித்தீர்களா? இல்லை பதில் சொன்னீர்களா?அயோத்தியா திட்டத்தில்கூட ஊழல் செய்த கட்சிதான் பா.ஜ.க. என்று சி.ஏ.ஜி. அறிக்கை சொல்லியிருக்கிறது. எல்லாத் திட்டங்களுக்கும், நம்முடைய வாய்க்குள் நுழையாத பெயராகப் பார்த்து வைப்பார்கள். அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

அதாவது இராமாயணம் நடந்த இடங்களுக்கு எல்லாம் பயணிகளை அழைத்துச் செல்லும் சுற்றுலாத் திட்டம் அது. இதை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், கோவா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் செயல்படுத்தப் போவதாக சொன்னார்கள்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதில், பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. குற்றம் சாட்டி இருக்கிறது. ஒப்பந்தம் வழங்கியதில் எத்தகைய விதிமீறல்கள் இருக்கிறது என்று இந்த அறிக்கை சொல்லியிருக்கிறது.

அடுத்து, பா.ஜ.க. அறிவித்ததை நிறைவேற்றாது என்பதற்கு சி.ஏ.ஜி. அறிக்கை ஒரு எடுத்துக்காட்டை சொல்லியிருக்கிறது. அதுதான் உதான் திட்டம். மிகப்பெரிய பீடிகையோடு இந்த திட்டத்தை தொடங்கினார்கள். ஏழைகள் விமானத்தில் பயணிக்கலாம், நடுத்தர நகரங்களிலும் விமான நிலையம் அமைக்கப்போகிறோம் என்று சொல்லி 2016-ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம் இது.

உதான் திட்டத்திற்காக ஒன்றிய அரசு 1,089 கோடி ரூபாயை ஒதுக்கியது. திட்டமிடப்பட்ட 774 வழித்தடங்களில் விமான சேவை வழங்க முடிவு செய்ததில் 7 விழுக்காடு தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகிறது. 93 விழுக்காடு தடங்களில் விமானங்கள் இயக்கப்படவில்லை.

இவ்வாறு, அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை என்று எல்லாவற்றிலும், 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அளவிட்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் இதற்கு பிரதமரோ சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை. அவர்களால் பதில் சொல்லவும் முடியாது. அதனால்தான் இதில் இருந்து மக்களை திசைதிருப்ப வெவ்வேறு அரசியலை கையில் எடுக்கிறார்.

ஆனால், ஏழை, எளிய – பிற்படுத்தப்பட்ட- பட்டியலின பழங்குடியின – மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருபவர்தான் நரேந்திர மோடி என்று, இப்போது நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துவிட்டார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.க. வீழ்த்தப்பட்டிருப்பதே, இதற்கான அடையாளம்.

2024 தேர்தலில், பா.ஜ.க. ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். பா.ஜ.க.வின் வகுப்புவாத, ஊழல், கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலாக முழங்க வேண்டும். பரந்து விரிந்த நம் இந்திய நாட்டை காப்பாற்றுகிற கடமை நம் எல்லோரின் கையிலும்தான் இருக்கிறது!

இந்த M.K.STALIN குரலை, இந்தியாவின் குரலாக எல்லோரிடமும் கொண்டு செல்லுங்கள் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து இந்தியாவுக்காகப் பேசுவோம்! இந்தியாவைக் காப்போம்! நன்றி, வணக்கம்!”

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...