கடந்த 10 ஆம் திகதி லிபியாவில் ‘டேனியல்’ எனும் மிகப்பெரும் புயல் தாக்கியபின் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சவூதி அரேபியாவின் நிவாரணங்கள் கடந்த சனிக்கிழமை முதல் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
லிபியா கண்ட சூறாவளிகளில் மிகக் கடுமையானதான இந்தச் சூறாவளியினால் ஆயிரக்கணக்கான உயிர் சேதங்களும்,மில்லியன் கணக்கான பொருட்சேதங்களும் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. பலர் காணாமல் போயுமுள்ளனர்.
இந்நிலையை எதிர்கொள்வதற்காக, சவூதி அரேபியா மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களும், பிரதமர் முஹம்மத் பின் ஸல்மான் அவர்களும் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மையத்தின் ஊடாக உடனடியாக சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள லிபிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்கும்படி பணித்துள்ளார்கள்
பாதிக்கப்பட்டவர்களுக்கான சவூதி அரேபியாவின் முதலாவது நிவாரண விமானம், 90 டொன் உணவு மற்றும் தங்குமிட உதவிகளுடன் லிபிய பென்காசி நகரிலுள்ள, பெனீனா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.
இவ்வுதவிகள் சில வாரங்களுக்கு தொடரும் என சவூதி அரேபியாவின் நம்பத்தகு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சவூதி அரேபியா, மனிதாபிமான உதவிகள் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
2018 ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியா லிபியாவுக்கு, மனிதாபிமான உதவிகள், கல்வித்துறை இன்னும் ஏனைய முன்னேற்றகரமான நிகழ்ச்சித் திட்டங்கள் என 10 திட்டங்களுக்காக 5,734,571 டாலர்களை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட லிபிய மக்களுக்கான 40 மெட்ரிக் தொன் அடங்கிய இரண்டாவது தொகுதி நிவாரண உதவிகள் ஞாயிறன்றும் 50 மெட்ரிக் டொன் அடங்கிய மூன்றாவது தொகுதி திங்களன்றும் அனுப்பி வைக்கப்பட்டன.
தகவல்: கலாநிதி M H M Azhar, பணிப்பாளர், பின் பாஸ் மகளிர் கல்லூரி – மல்வானை