ஒன்லைன் மூலமான இலத்திரனியல் நீர் கட்டணப் பட்டியல் முறைமையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அச்சிடப்பட்ட நீர் கட்டண பட்டியலுக்கு பதிலாக இலத்திரனியல் நீர் கட்டணப் பட்டியல் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
344,697 நீர் வழங்கல் இணைப்புகளில் 326,124 இணைப்புகளுக்கான தொலைபேசி இலக்கங்கள் இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களுக்காக இதுவரை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத, தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதேசங்களில் முதற்கட்டமாக இப்புதிய முறைமையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பாவனையாளர்களுக்கான நீர் கட்டணத்தை வழங்குவதில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
பரீட்சார்த்தமாக கொழும்பு தெற்கு நகர்ப்பகுதி, கண்டி தெற்கு நகர்ப்பகுதி, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் இவ்வாறு இலத்திரனியல் கட்டணப் பட்டியல் முறைமைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அதை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.