‘செனல் 4’ தகவல்கள் தொடர்பாக பக்க சார்பற்ற விசாரணை வேண்டும்- (அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபழில் நளீமி)

Date:

எழுத்தாளர்:
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபழில் நளீமி
ஜாமியா நளீமியா
பேருவளை

முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் சூத்திரதாரிகள் தொடர்பாக செனல் 4 வெளியிட்டுள்ள கானொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில் அது தொடர்பான பக்கசார்பற்ற விசாரணைகள் உடனடியாக மேற்கொள்ளபட வேண்டும் என பலரும் குரலெழுப்புவதை அவதானிக்க முடியும்.

நிச்சயமாக அந்தக் கோரிக்கை நியாயமானது. ஆனால் இதற்கு முன்பு இருந்த இரண்டு ஜனாதிபதிகள் நியமித்த விசாரணைக் கமிஷன்களது விசாரணைகளுக்கும் பரிந்துரைகளுக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

உரிய விசாரணை ஏன் தேவை?

1. தாக்குதல்களில் எமது சகோதர சமூகமான கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த 269 பேர் கொல்லப்பட்டு பலர் அங்கவீனமுற்று மற்றும் பலர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் அந்த சமூகத்திற்கு கட்டாயமாக நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

2. அடுத்ததாக இந்த தாக்குதல்கள் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்கள் மிக மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பள்ளிவாயல்களுக்குள் அவற்றின் புனிதத்துவத்துக்கு பங்கமான முறையில் தேடுதல் நடாத்தப்பட்டதாகக் கூட செய்திகள் வெளிவந்தன.

முஸ்லிம்களது வீடுகள், ஸ்தாபனங்கள் போன்றன தேடுதல் வேட்டைக்கு உள்ளாக்கப்பட்டன.

முஸ்லிம்கள் பயத்தின் காரணமாக  இஸ்லாமிய நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை எரித்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டார்கள்.

3. சிறையில் தள்ளப்பட்ட பலர் எவ்வித குற்றங்களும் இல்லை என்று தற்போது விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், அவர்களதும் மற்றும் அவர்களது உற்றார் உறவினர்கள், நேசத்துக்குரியவர்கள் ஆகியோரதும் உள்ளங்களில் ஏற்பட்ட மனக் கவலைகளையும் ஆழமான வடுக்களையும் வார்த்தைகளில் வடிக்க முடியாது என்பது ஒரு புறம் இருக்க, அவர்கள் தமது வழக்குகளில் இருந்து விடுதலையாகிக் கொள்வதற்கும் சட்டத்தரணிகளுக்காகவும் மற்றும் ஏற்பாடுகளுக்காகவும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவுசெய்திருக்கிறார்கள்.

ஆனால், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சட்டத்தரணிகளின் சிலர் எவ்வித கட்டணங்களையும் பெற்றுக் கொள்ளாமல் இத்தகைய வழக்குகளுக்காக இலவசமாக முன்நின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படிப் போனாலும் இதற்காக ஆயிரக்கணக்கானவர்களது கால நேரங்கள் செலவழிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் முக்கியமான விஷயமாகும்.

4. அத்துடன் இந்த நாட்டில் பல சமூகப் பணிகளிலும் மற்றும் தேச நிர்மாணப் பணிகளிலும் ஈடுபட்ட, தனி நபர்களும் இயக்கங்களும் ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து முடக்கப்பட்டன. சில தடை செய்யப்பட்டன. சந்தேகக் கண் கொண்டு மக்கள் அவற்றை பார்க்கும் அளவுக்கு நிலை உருவாகியது.

இந்த அமைப்புக்களது சில அணுகுமுறைகள் நாட்டிற்கும் காலத்திற்கும் ஒவ்வாதவையாக இருந்திருக்கலாம். ஆனால் அவற்றை நிதானமாக அணுகி நெறிப்படுத்தியிருக்கலாம்.

ஆனால், இந்த அமைப்புகளது சமூக நலப்பணிகளால் பயனடைந்த அனாதைகள், விதவைகள், அங்கவினர்கள், கல்விச் சகாய நிதிகளைப் பெற்றவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக உதவியின்றி இப்போது வாடிக்கொண்டிருக்கிருப்பதாக பலரும் அங்கலாய்க்கிறார்கள்.

5. இதுவரைக்கும் நாளாந்தம் பலருக்கு உளவுப் பிரிவினரிடம் இருந்து தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்பது, மணித்தியாலக் கணக்கில் விசாரணை நடத்துவது, தடுத்து வைப்பது, ஒரே கேள்விகளை பல தடவை கேட்பது, ஒரே ஆவணத்தை பல தடவை சமர்ப்பிக்கக் கேட்பது, வித்தியாசமான நபர்கள் வித்தியாசமான இடங்களில் இருந்து விசாரணைக்காக வருவது என்றெல்லாம் விசாரணைகள் இன்று வரை தொடர்வதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்கக்கூடிய முன்னோடிகளது மனநிலையை பலவீனப்படுத்தி அனாதைச் சமூகமாக மாற்றும் நோக்கிலேயே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

6. தாக்குதல்களைத் தொடர்ந்து பலர் அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக தொழில்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும் இன்னும் பலருக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டதாகவும் பல தொழில் மையங்கள் முஸ்லிம்களுக்காக கதவுகளை மூடிக்கொண்டதாகவும் அக்காலத்தில் பேசப்பட்டது.

7. இஸ்லாமிய இயக்கங்களது நிகழ்ச்சி நிரல்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் அரச பாடசாலைகளில் கற்பிக்கப்படும் இஸ்லாம், இஸ்லாமிய நாகரிக பாடங்கள், மற்றும் மதரஸாக்கள், அஹதிய்யாக்கள் என்பவற்றின் பாடத்திட்டங்கள் என்பன தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தூண்டுகின்றன என்றும் எனவே அவை மாற்றப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் கூறப்பட்டு அதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்தன.

8. . முஸ்லிம்களின் தனித்துவத்தை பாதுகாப்பதற்கும் இஸ்லாமிய ஞானங்களை அதிகரிப்பதற்குமான ஊற்றுக் கண்களை மூடுவதற்கும் அவர்கள் இஸ்லாத்தை கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை முற்றுமுழுதாக இல்லாமல் செய்வதற்குமான முயற்சிகளாக இவை இருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த நாட்டில் குற்ற மனப்பாங்கோடு வாழும் நிலைக்கு ஒவ்வொரு முஸ்லிமும் தள்ளப்பட்டிருப்பது போல் தெரிகிறது.

பக்கசார்பற்ற நீதி அவசியம்

இன்னும் ஒரு கருத்தையும் மிக அழுத்தமாகக் கூற வேண்டும். அதாவது, முஸ்லிம் சமூகத்துக்குள் தீவிரவாத கருத்துக்களை கொண்டவர்கள் உருவாகுவதற்கான ஏற்பாடுகள் இருப்பின் அவற்றைக் கண்டுபிடிப்பதும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும் இந்த நாட்டின் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் அரசின் கடமையாகும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது. ஆனால் அதற்கும் ஒரு முறைமை இருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில விஷமிகள் ஒரு படுபாதகத்தை செய்துவிட்டார்கள் என்பதற்காக முழு சமூகத்தையும் சந்தேகக் கண்கண்டு நோக்குவதும் எல்லோரையும் பழிவாங்குவதும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதும் முறையல்ல.

அப்படியாயின் இலங்கையின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் இந்நாட்டில் செய்துள்ள குற்றச் செயல்களுக்காக அவர்கள் சார்ந்துள்ள மதங்களையும் இனங்களையும் குற்றம் கூற முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

இவ்வழகிய எமது இலங்கை தேசத்தை குட்டிச் சுவராக்கி சின்னாபின்னமாக்குவதற்கும், யுத்தங்களுக்கும், இன மோதல்களுக்கும், வன்முறைகளுக்கும் பின்னால் பிராந்திய அரசியல் நலன்களும் அரசியல்வாதிகளது குறுகிய இலாபங்களும் பொருளாதார நலன்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி அல்லும் பகலும் உழைக்கும் பண முதலைகளும் இருப்பதும் தெளிவான உண்மைகள் என்பதை அனைத்து இனத்தவர்களும் குறிப்பாக அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மேலும் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறிப்பாக முஸ்லிம்களதும் பொதுவாக இந்த நாட்டினதும் வரலாற்றில் ஆழமான வடுக்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி இருப்பதினால் அத்தாக்குதல்களை திட்டமிட்டவர்கள், அதற்கு பக்கபலமாக அமைத்தவர்கள் தொடர்பில் எவ்வித பக்க சார்புமற்ற, இதய சுத்தியுடன் கூடிய விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.

உண்மைகள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், முஸ்லிம்களாக இருப்பினும் சரியே.

ஏனெனில், உலகப் பொது மறை அல்குர்ஆனில் அல்லாஹ் நீதி பற்றி 19 இடங்களில் கூறியுள்ளான். நீதியாளர்களை தான் நேசிப்பதாகவும் நீதி செலுத்துவதற்கு இனபந்துத்துவ உறவுகள் கூட தடையாக இருக்கக் கூடாது என்றும் அவன் வலியுறுத்துகிறான்.

“விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே  சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்  நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் உண்மையான சாட்சியம் கூறுங்கள்.

ஏனெனில், அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன் எனவே நியாயம் வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள் மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது சாட்சி கூறுவதைப் புறக்கணித்தாலும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.”(4:135)

மாற்று இனத்தைச் சேர்ந்த ஒருவர் அநீதிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம்கள் முயற்சிக்க வேண்டும்.

அவர் முஸ்லிம்களின் விரோதியாக இருந்தாலும் சரியே. பகைப்புலத்தில் உள்ளவரது பக்கம் நியாயம் இருப்பினும் அதனையே அல்குர்ஆனை ஏற்றுக் கொள்ளும்.

“விசுவாசம் கொண்டவர்களே நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்.

நீதி செலுத்துங்கள்  இதுவே இறைபயபக்திக்கு மிக நெருக்கமாகும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்”(5:08)

தனது மகள் பாத்திமா திருடினாலும் அவளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனவே, நாட்டில் சட்டத்தை, ஒழுங்கை, நீதியை நிலைநாட்டுவது, அநீதிக்கு உட்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பது,அநியாயக்காரர்கள் தண்டிக்கப்படுவது போன்ற ஏற்பாடுகளுக்காக முஸ்லிம் சமூகம் தனது பூரண ஆதரவையும் அனுசரணையையும் அரசுக்கு வழங்க தயாராகவே இருக்கிறது.

சூத்திரதாளிகளை தப்ப வைப்பதற்கும் உண்மைகளை மூடிமறைப்பதற்கும் கவனங்களை திசை திருப்புவதற்குமன சூசகமான திட்டமிடப்பட்ட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இஸ்லாம் நிராகரித்த பயங்கரவாதம்

படுபாதகர்கள் மேற்கொண்ட ஈஸ்டர் தாக்குதல்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முற்றிலும் முரணானவை. அது மட்டுமன்றி அவர்களால் இலக்கு வைக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தவர்கள் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் அட்டூழியங்களைச் செய்தவர்கள் அல்லர்.

அமைதியாக ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்ட சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் போன்ற அப்பாவிகளை கொலை செய்வதற்கு எந்த நியாயமும் இஸ்லாத்தில் இல்லை.

பிற மத ஆலயங்களையும் மதத் தலைவர்களையும் யுத்தத்தில் சம்பந்தப்படாத சிவிலியங்களையும் தாக்கக் கூடாது என்பது இஸ்லாமிய யுத்த தர்மமாகும் என்றிருக்க இத்தாக்குதல்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.

எனவே, அந்த பயங்கரவாதிகளது தாக்குதல் மிலேச்சத்தனமானவை  என்பதில் இஸ்லாமிய நோக்கில் கருத்து வேறுபாடு கிடையாது.

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்து வருவது மாத்திரமன்றி இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற துறைகளில் ஏராளமான பங்களிப்புக்களை செய்திருக்கிறார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.

இந்த நாட்டின் ஒருமைப்பாடு, இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் என்பவற்றை பாதுகாப்பதில் அவர்கள் காத்திரமான பங்களிப்புகளையும் செய்திருக்கிறார்கள்.

இந்த தேசத்தின் ஆல்புல ஒருமைப்பாட்டுக்கு அவர்கள் ஒரு பொழுதும் சவாலாக அமையவில்லை.பிரிவினை வாதங்களுக்கு ஒருபோதும் துணை நிற்கவுமில்லை.

ஆனால், அண்மைக்காலக அவர்களுக்கெதிரான கெடுபிடிகள் அவர்களது வரலாற்றுப் பங்களிப்பை முற்று முழுதாக மறக்கடிக்கச் செய்திருப்பது மட்டுமன்றி, அவர்களை துரோகிகளாகவும் சித்தரிக்கின்றன.

ஒரு நாட்டின் மீது ஒர் இனத்தைச் சேர்ந்த குடிமகனுக்கு பாசமும் பற்றும் ஏற்பட வேண்டுமாயின் அந்த நாட்டின் ஏனைய இனங்களைச் சேர்ந்த பிரஜைகளும் அவனை நேசிக்க வேண்டும். அவனது கஷ்டத்தில் துன்பத்தில் பங்கெடுக்க வேண்டும்.

தேச கட்டமைப்பிலும் நிர்மாணப் பணிகளிலும் நீதி நியாயமாக நடப்பது, பரஸ்பர ஒத்துழைப்பு, மதிப்பு, நல்லெண்ணம் என்பன மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. சந்தேகப் பார்வை, ஒதுக்கல், இனவாதம் என்பன சமூகங்களின் உறவுகளுக்கு பெரும் நஞ்சாகும்.

ஒரு தேசம் என்ற வகையில் தமிழ் சமூகங்களது உறவுகள் விடயத்திலும் முஸ்லிம்களுடனான உறவுகள் விடயத்திலும் பெரும்பான்மைச் சமூகம் மிகப்பெரிய தவறுகளைச் செய்திருக்கிறது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதன் விளைவுகளை தற்போது அணுவணுவாக நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் அனுபவித்துக் கொண்டிருக்கிறனர். பொருளாதார வீழ்ச்சி,மூளை சாலிகளது வெளியேற்றம், தற்கொலைகள், குற்ற செயல்கள் அதிகரிப்பது என்பன அவற்றின் வெளிப்பாடுகளாகும்.

வேறு பல விசாரணைகளும் தேவை

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் உரிய முறையில், பக்கசார்பற்ற முறையில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அது மட்டுமன்றி தர்கா நகர், திகனை, மினுவாங்கொடை, கிந்தோட்டை ஆகிய இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை பலரும் மறந்து விட்டார்கள்.

அவற்றில் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள முஸ்லிம்களது சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன.

அவை முஸ்லிம்களது சொத்துக்கள் என்பதை விட நாட்டின் சொத்துக்களாகும். திகன கலவரங்களில் மட்டும் 1500 கோடி ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக சிலர் கூறியதில் உண்மையிருக்கலாம்.

இவை அனைத்தும் இந்த நாட்டின் பிரிக்க முடியாத ஓர் அங்கமான முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட நஷ்டங்கள் என்று பார்ப்பதை விடவும் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் என்று பார்ப்பதே பொருத்தமாகும்.

ஆனால், அவற்றைச் செய்தவர்களுடைய பின்னணிகள் தொடர்பாகவோ அந்தக் குற்றவாளிகள் உருவாகுவதற்கு காரணமாக அமைந்த பாடத்திட்டங்கள், இயக்கங்கள், பின்புலங்கள், கலாநிலையங்கள் தொடர்பாகவோ எவ்வித ஆய்வுகளோ விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இவற்றுக்காக வேண்டியும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விசாரணைக் குழுக்களில் அங்கம் வகிக்க வேண்டியவர்கள் தொடர்பான ஆலோசனைகளுக்கு முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர்களும் அழைக்கப்பட வேண்டும். எதிர்காலத்திலும் இது போன்ற வன்முறைகள் நடைபெறுவதை தடுப்பதற்கும் இன நல்லுறவை வளர்ப்பதற்கும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இதற்காக முஸ்லிம் சமூகம் தனது ஒத்துழைப்பை என்றும் நல்ல காத்திருக்கிறது.

அனைத்து சமூகங்களும் ஒற்றுமைப்பட்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் சமய நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு சமாதான பூமி எமக்கு அவசியம். அதற்கு தடையாக அமையும் அரசியல் சுயநலவாதிகளை மக்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொண்டு அவற்றை நிராகரித்து சமய, மொழி, இன வேறுபாடுகளுக்கு மத்தியிலும் கைகோர்த்து வீறுநடை போட வேண்டும்.

நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்கள் என்ற மனநிலையுடன் பாசத்தால் கட்டுண்டு வாழ்வோமாக!

நன்றி: விடிவெள்ளி பத்திரிகை கட்டுரை

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...