சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி நிவாரண தொகுதியின் இரண்டாம் தவணைக்கான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதைத் தொடர்ந்து அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர் மட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
கியூபாவில் நடைபெற்ற ஜி77 மற்றும் சீனா உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி அமர்வில் தமது விசேட உரையை ஆற்றவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வு குறித்த சர்வதேச நாணய நிதிய குழுவுடனான கலந்துரையாடல் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமானது.
இதனிடையே, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி நிவாரண தொகுதியின் இரண்டாம் தவணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதும், குறித்த நிதி இந்த மாதம் கிடைக்கப்பெறாது என வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.