மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்தார்.
இந்த புதிய மருத்துவ நிறுவனங்கள் நாட்டில் தற்போதுள்ள மருத்துவப் கல்லூரிகள் நிர்ணயித்துள்ள தரங்களை கடைப்பிடிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ரம்புக்வெல்ல, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரவை ஏற்கனவே சுகாதார துறை தொடர்பிலான மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களில் அல்லது வெளிநாட்டில் படிக்க விரும்பும் நமது இளைஞர்களின் எண்ணிக்கையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நமது நாட்டின் பிள்ளைகளுக்கு போதுமான வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்குவது நமது தார்மீகக் கடமையாகும்.
மேலும், எமது நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் ஆலோசகர்களாகப் பணியாற்றிய பேராசிரியர்கள் குறைந்தபட்சத் தகுதிகளை கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
மருத்துவக் கல்வியைத் தொடர்வதில் நிதித் தடைகளை எதிர்கொள்ளும் தகுதி வாய்ந்த மாணவர்கள் இருப்பதை நாம் ஒப்புக்கொள்கின்றோம்.
இதனடிப்படையில், 10விகிதமான மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை ஒதுக்கி, அவர்களுடைய கல்வி தேவைக்கு இந்தப் பல்கலைக்கழகங்கள் உதவிபுரியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பாக மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
இலங்கையின் இலவச கல்வி முறையில் கல்வி கற்கும் மருத்துவ நிபுணர்களுக்கு இங்கிலாந்து போன்ற நாடுகள் கணிசமான அளவு அதிக சம்பளம் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.