நபியவர்கள் மனித குலத்துக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்கள்: ஜ ம்இய்யத்துல் உலமாவின் விசேட மீலாத் தின செய்தி

Date:

அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிடும் சிறப்புச் செய்தி….

‘நபிகள் நாயகமே! உங்களை விட அழகான எவரையும் என் கண்கள் கண்டதே இல்லை. உங்களை விட அழகான யாரையும் பெண்கள் பெறவுமில்லை. அத்தனை குறைகளை விட்டும் பரிசுத்தமானவராக நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பியவாறு படைக்கப்பட்டது போன்றல்லவா இருக்கிறீர்கள்!’ (ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு)

‘ரபீஉன்’ என்றால் வசந்தம் என்று பொருள்படும். வசந்தகாலமானது பூமிக்கு அழகையும் ரம்மியத்தையும் பசுமையையும் செழிப்பையும் கொண்டுவருகிறது.

அதுபோலவே ரபீஉனில் அவ்வல் மாதத்தில் பிறந்த எமது உயிரிலும் மேலான அன்பு நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மானிட சமூகத்துக்கு தூதுத்துவ ஒளி, விடிவு, வெற்றி, விடுதலை, அமைதி, சுபீட்சம் என அகிலத்தார் அனைவருக்கும் இறையருளை, சர்வதேசத் தூதை சுமந்து வந்தார்கள்.

இதனை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘உலக மக்களுக்கு அருட்கொடையாகவே அன்றி உம்மை நாம் அனுப்பி வைக்கவில்லை’. (ஸுறா அல் அன்பியா:  107)

அந்தவகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதம் அலாதியான சிறப்பைப் பெறுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மீலாதுந் நபி தினம் எனப்படும் நபியவர்களின் பிறந்த தினமானது உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய உன்னதமான ஒரு நிகழ்வுக்குரிய தினமாகும்.

அன்னார் மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள். அனைவருடனும் பாகுபாடின்றி, அன்பாகவும் பண்பாகவும் பழகினார்கள்.

மனித நேயம், சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பவற்றுக்காக அன்னார் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். எப்போதும் எல்லா நிலைமைகளிலும் நீதமாக நடந்துகொண்டதோடு ஏழை எளியோரை, அநாதைகளை அரவணைத்து வாழ்ந்தார்கள்.

பல்லின சமூகங்களையும் உள்ளடக்கிய ‘மதீனா சாசனம்’ எனும் நீதமான யாப்பை அறிமுகம் செய்தார்கள். ஆன்மிகம், லௌகீகம் ஆகிய இரண்டிலும் ஒருசேர மகத்தான வெற்றியைப் பெற்றார்கள்.

எனவேதான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதராக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

நபியவர்கள் மூலம் அல்லாஹ் நபித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான். மறுமை வரைக்கும் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டும் பொறுப்பை அன்னாரிடம் ஒப்படைத்தான்.

எனவே எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித வாழ்வின் அனைத்துப் பகுதிக்கும் வழிகாட்டும் ஏக வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.

அம்மாமனிதரின் முழு வாழ்வுமே மனித குலத்திற்கான அழகிய முன்மாதிரிகளால் நிரம்பி வழிந்தன. இந்த உண்மையை அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

‘அல்லாஹ்வின் தூதரில் நிச்சயம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது’. (ஸுறா அல் அஹ்ஸாப்: 21)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பற்றுவைத்தல் எனும்போது குறைந்தபட்சம் அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்தும் ஸலாமும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் – அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) சொல்லல், அவர்களின் பெயர் கூறும் போதும் பிறர் கூறக் கேட்கும் போதும் கண்ணியப்படுத்தி ஸலவாத் சொல்லல், அவர்களது குடும்பத்தவர்கள் (அஹ்லுல்பைத்), தூய மனைவிமார்கள் மற்றும் நபித்தோழர்கள் (ஸஹாபாக்கள்) ஆகியோர் மீதும் அன்பும் கண்ணியமும் வைத்தல், ஹதீஸ்களை கற்றுக்கொள்ளல், ஸுன்னாக்களை பேணுதலோடு நடைமுறைப்படுத்தல், நபிகளாரின் ஆளுமைப் பண்புகளை புரிந்துகொள்ளவும் படித்து விளங்கவும் நேரம் ஒதுக்குதல், அறியாத மக்களுக்கு அன்னாரை அழகிய முறையில் அறிமுகம் செய்தல் மற்றும் அவர்களை தவறாகப் புரிந்து வைத்திருப்பவர்களுக்கு அப்புரிதலைக் களைந்து, சரியான புரிதலை அவர்களுக்கு வழங்கி நபியவர்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தல் என்பன அன்னாரின் சமூகத்தினர் என்ற வகையில் எமது கடமையும் பொறுப்புமாகும்.

எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது எமது உயிரை விடவும் மேலாக நேசம் வைப்போம். அவர்களது வாழ்க்கையை ஆழமாகக் கற்றுக் கொள்வதோடு எமது பிள்ளைகளின் உள்ளங்களிலும் அவர்கள் மீதான அன்பையும் பற்றையும் விதைப்போம்.

அல்லாஹ் எம்மனைவரையும் இறுதிநாள் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித்தந்த வழியில் வாழச்செய்வதோடு அன்னாரோடு சுவனத்தில் ஒன்றாக வாழும் பாக்கியத்தையும் தந்தருள்வானாக.

 

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...