ஐக்கிய நாடுகளின் விசேட செயற்திட்டத்திற்கான ஸ்தாபனத்தின் தெற்காசியாவின் பணிப்பாளர் சார்லஸ் காலனன் மற்றும் விசேட செயற்திட்ட முகாமையாளர், செயற்திட்ட மேலாளர் ஆகியோருக்கும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்றது.
நீர்வழங்கல் துறையில் விசேட செயற்திட்டங்களை அமுல்ப்படுத்தவும், தடையின்றி நீர்வழங்கலை வழங்குதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் நீர்வழங்கல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குதல் தொடர்பாகவும், முதலீட்டு முறைமை மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியுடன் நீர் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பாகவும் விரிவாகவும் ஆரப்பட்டுள்ளது.
இதேவேளை, பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கவனம் வெலுத்தப்பட்டது.
இதில் வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பாக விசேட செயற்திட்டங்களை மேற்கொள்ளவும், சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளை நாடுவதற்கும் முன்மொழிவுகளை உருவாக்குவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டது.