மத நிந்தனை மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பாக இஸ்லாம் கூறும் படிப்பினைகள்- அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்

Date:

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)
(சிரேஷ்ட விரிவுரையாளர், பேருவளை, ஜாமியா நளீமிய்யா) 

இஸ்லாம் ஏகதெய்வக் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுடன் இஸ்லாத்தை பரிபூரணமாக கடைப்பிடிக்க வேண்டும் என தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்பதும் தெளிவான உண்மையாகும்.

ஆனால், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் விடயத்தில் சகிப்புத்தன்மையோடும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்ளுமாறும் அது கட்டளை பிறப்பித்திருக்கிறது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை நோக்கி “உங்களுக்கு உங்களது மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்”(109:06) என்று கூறும்படி அல்லாஹ் கூறுகிறான். இது பிறருக்கு மத சுதந்திரத்தை ஊர்ஜிதப்படுத்தும் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

ஒருவர் தனது கொள்கையில் உறுதியாக இருப்பதில் தவறு கிடையாது. ஆனால் மற்றொரு கொள்கையில் இருப்பவர் அவரது கொள்கையை பின்பற்றுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் சுதந்திரம் உடையவராவார்.

முதலில் நாம் எமது கொள்கை பற்றிய தெளிவை அவருக்கு வழங்க வேண்டும். மிகத் தெளிவான விளக்கத்தை அவர் பெறும் வகையிலான எத்திவைப்பாக அது இருக்க வேண்டும். அதனை அல்லாஹ் (البلاغ المبين (மிகத்தெளிவான எத்திவைப்பு) என்று கூறுகிறான்.

அவ்வாறு அவருக்கு தெளிவு கிடைத்த பின்னரும் அவர் தொடர்ந்தும் தனது கொள்கையிலேயே இருக்க விரும்பினால் அவரை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிட்டு அவருடன் சகிப்புத்தன்மையோடும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்வது தான் இஸ்லாமிய பண்பாகும்.

“நிச்சயமாக எத்திவைப்பது மட்டுமே உமது பொறுப்பாகும். அவர்களை விசாரிப்பது எமது பொறுப்பாகும்”(13:40) என்று கூறுகிறான்.

இதன் மூலம் அல்லாஹ் பிறரது நம்பிக்கை மற்றும் கொள்கை சுதந்திரத்தில் கைவைக்க வேண்டாம் என்று உணர்த்துகிறான்.

ஒருவர் தனது கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி பிறரை நேரடியாகவோ மறைமுகமாகவோ பலாத்காரப்படுத்துவது குற்றமாகும்.

“நீர் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர் அல்லர்”(88:22) “மக்கள் (உமது கொள்கையை) விசுவாசம் கொள்வதற்காக அவர்களை நீர் பலாத்காரப்படுத்துகிறீரா?” (10:99) என்று அல்லாஹ் தனது தூதரிடம் கேள்வி கேட்பதில் இருந்து பலாத்காரம் என்பது தடுக்கப்பட்டிருப்பதை உணர முடியும்.

“மார்கத்தில் பலாத்காரம் இல்லை” என்ற குர்ஆனிய வசனமும் இதனையே கூறுகிறது. அதற்கும் அப்பால் ஒரு படி மேலே சென்று பிற சமயத்தவர் வணங்கும் தெய்வங்களை ஏசுவதையும் அவர்களது கலாசார தனித்துவங்களை பழித்துரைப்பதையும் அல்குர்ஆன் தடை செய்திருக்கிறது.

“அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள். (அப்படித் திட்டினால்) அவர்கள் தெளிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்” (6:108) என்ற குர்ஆன் வசனம் இதற்கு தகுந்த சான்றாகும்.

பிறரை நாம் மதிக்கும் பட்சத்தில் அவர்கள் எம்மை மதிப்பார்கள். அதாவது பிற சமயத்தவர்களுடன் மத சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்பவர்களுக்கு பிறரிடம் இருந்து மத சகிப்புத்தன்மை கிட்டும் என்பது இதன் பொருளாகும்.

ஆனால், நடைமுறைப் பிரச்சினை ஒன்று உள்ளது. அதாவது நாம் இஸ்லாத்தை பிறருக்கு எத்திவைக்கும் போது, இஸ்லாம் அந்த கொள்கைகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் இஸ்லாத்தின் சிறப்பம்சங்களையும் கூறுவது போன்றே அந்த கொள்கைகளில் இருக்கின்ற குறைபாடுகளையும் சுட்டிக்காட்ட நிர்பந்திக்கப்படுவோம்.

அங்கு தான் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இதற்கு இஸ்லாம் அழகான வழிமுறைகளை எமக்குக் காட்டித் தருகிறது. அவர்களோடு கருத்து பரிமாறல் செய்கின்ற பொழுது “மிகவும் அழகிய” வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது அல்குர்ஆனுடைய ஆணித்தரமான கட்டளையாகும்.

மிகவுமே உத்ததமான வழிமுறை எது?

அல்குர்ஆனில் அல்லாஹ் இது தொடர்பாக இரண்டு வசனங்களைக் குறிப்பிடுகிறான்.

“வேதக்காரர்களுடன் மிகவும் அழகிய வழிமுறையில் அன்றி நீங்கள் கருத்துப் பரிமாறல் செய்ய வேண்டாம்”(29:46)

“உமது ரட்சகனின் பாதையின் பால் ஞானத்தோடும் அழகான உபந்நியாசத்தை பயன்படுத்தியும் அழைப்பு விடுங்கள். அவர்களோடு ‘மிகவும் அழகிய வழிமுறை’ யை பயன்படுத்தி கருத்து பரிமாறல் செய்யுங்கள்”(16:125)

இங்கு வந்திருக்கும் சொற்பிரயோகம் ‘மிகவுமே அழகிய வழிமுறை’ بالتي هي أحسن என்பதாகும். இருக்கின்ற வழிமுறைகளுக்குள் மிகவும் அழகியது,பொருத்தமானதை பிரசாரம் செய்பவர் கையாள வேண்டும் என்பது இங்கு கட்டளையிடப்பிடப்படுகிறது.

எனவே, கரடுமுரடான, மனதை புண்படுத்தும், பிறரது ஆத்திரங்களை சீண்டி விடும், குழப்பங்களை ஏற்படுத்தும் வழிமுறைகள் பொருத்தமானவையாக இருக்க மாட்டாது.

நளினமான, அறிவு பூர்வமான, சிநேகபூர்வமான, ஆதாரங்களோடு கூடிய, நாசுக்கான அணுகுமுறைகள் மாத்திரமே தஃவாவுக்கு அவசியப்படுகின்றன.

இவ்வாறெல்லாம் இஸ்லாத்தை ஏத்திவைத்த பின்பும் ஒருவர் ஏற்றுக் கொள்ளாத போது அவர் விடயமாக அல்லாஹ்விடத்தில் பொறுப்புச் சாட்டிவிட வேண்டும்.

அத்துமீறல் குற்றம்

பிற மத ஆலயங்களையும் மத தலைவர்களையும் தாக்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. யுத்த சந்தர்ப்பத்தில் சிவிலியன்களை குறிப்பாக மதத் தலைவர்களை கொலை செய்வதும் ஆலயங்களை உடைப்பதும் இஸ்லாமிய தர்மம் அல்ல.

துறவிகள் தங்கும் மடங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், யூதர்களது வணக்க ஸ்தலங்கள் என்பவற்றை பாதுகாப்பது இஸ்லாமிய ஆயுதப் போரின் நோக்கங்களில் ஒன்று என்ற கருத்து அல்குர்ஆனின் (22:40) எனும் வசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உமர்(ரழி) குத்ஸில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய உடன்படிக்கையில் அவர்களது உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் தேவாலயங்களுக்கும் சிலுவைகளுக்கும் பாதுகாப்பு வழங்கினார்.

தேவாலயங்களில் எவரும் சென்று குடியிருக்கலாகாது. அவை தகர்க்கப்படவோ அல்லது அவற்றின் ஒரு சிறு பகுதி சேதப்படுத்தப்படவோ கூடாது(தாரீகுத் தபரீ)

கைபர் யுத்தத்தின் பின்னர் யூதர்களது வேதமான தெளராத்தின் பிரதியொன்று யுத்த களத்தில் இருப்பதை கண்ட நபியவர்கள் அதனை பாதுகாப்பாக யூதர்களிடம் ஒப்படைக்கும் படி தனது தோழர்களுக்குக் கூறினார்கள்.

எனவே, பிற சமயத்தவர்களது மனம் நோகும் படி நடந்து கொள்வதும் அவர்களது மத, கலாசார தனித்துவங்களை பழித்துரைப்பதும் அவர்களது மத வழிபாட்டு தலங்களை தாக்குவதும் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பெரும் குற்றங்களாகும். மாறாக அவர்களுக்குரிய கண்ணியத்தையும் மரியாதையையும் வழங்கும் படி இஸ்லாம் பணிக்கிறது.

முஸ்லிம் சமூகத்துக்குள் சகிப்புத் தன்மை

முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் இயக்கங்களும் சங்கங்களும் தமக்கிடையே ஒற்றுமையோடும் பரஸ்பர புரிந்துணர்வோடும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் ஆணித்தரமான கருத்தாகும்.

மாற்று மதத்தவர்களுடன் சகிப்புத்தன்மையோடும் ஒற்றுமையோடும் நடந்து கொள்வதற்கு கூறப்பட்ட அதே நியாயங்களை இங்கும் கூற முடியும்

“மார்க்கத்தை நிலை நாட்டுங்கள் பிரிந்து விடாதீர்கள்” (42:13) என்பது குர்ஆனின் கருத்து. மார்க்கத்தை நிலை நிறுத்துவதற்கு உழைப்பது எவ்வாறு முக்கியமோ அதேபோன்று மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் தமக்கு மத்தியில் ஒற்றுமையோடு இருப்பதும் மிக முக்கியமானதாகும்.

மாறாக மார்க்கத்தை நிலை நிறுத்தப் போய் பிரிவினைக்கு நாம் வழிவகுத்தால் அது அல்லாஹ்வின் வெறுப்புக்குரிய செயலாகும்.

அல்குர்ஆனில் அல்லாஹ் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும்படி கட்டளையிடுகின்ற வசனத்திற்கு முன்னால் “அல்லாஹ்வின் கயிற்றை பலமாக கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என்று தொடர்ந்து சொல்வதன் நோக்கம் இஸ்லாமிய தஃவா செய்யப் போய் பிரிந்து விடக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகும்.

சூரா ஆல இம்ரானின் 103 ஆம் வசனம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது:-

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا(103)

“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்”

அடுத்த வசனம் இஸ்லாமிய பிரசாரம் செய்வதற்கு ஒரு குழுவினர் இருக்கட்டும் என்று இப்படிக் கூறுகிறது:-

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ (104)

“மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.”

அதனைத் தொடர்ந்து வரும் வசனம் பிரிவினை வேண்டாம் என எச்சரிக்கிறது:-

وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ (105)

“(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.”

எனவே, இஸ்லாமிய பிரச்சாரம் செய்யப் போகின்றவர்கள் பிரிந்து விடக்கூடிய அபாயம் இருப்பதினால் தான் இவ்வாறு அல்லாஹுத்தஆலா ஒரே சூராவில் ஒரே இடத்தில் இப்படி கூறியிருக்கிறான்.

ஒவ்வொருவருக்கும் குறித்த ஓர் இயக்கத்தையோ அல்லது தரீக்காவையோ பின்பற்றுவதற்கு அனுமதியிருக்கிறது. அது அவரது சுதந்திரமாகும். பிறர் வேறோர் அமைப்பில் இருக்கிறார் என்பதற்காக அவரை எதிர்ப்பதும் தாக்குவதும் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பெரும் குற்றங்களாகும்.

لا تَباغَضُوا، ولا تَحاسَدُوا، ولا تَدابَرُوا، وكُونُوا عِبادَ اللَّهِ إخْوانًا، ولا يَحِلُّ لِمُسْلِمٍ أنْ يَهْجُرَ أخاهُ فَوْقَ ثَلاثَةِ أيَّامٍ.( صحيح البخاري)

“பரஸ்பரம் வெறுப்புக் கொள்ளாதீர்கள். பரஸ்பரம் பொறாமைப்படாதீர்கள்; பரஸ்பரம் ஒருவர் ஒருவரை துண்டித்து நடக்காதீர்கள்.

அல்லாஹ்வின் அடியார்களாக, சகோதரர்களாக இருங்கள்” என்ற ஹதீஸும் விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை, பரஸ்பர புரிந்துணர் என்பவற்றுக்கு எதிரான போக்குகளில் இருந்து தூரமாக இருக்கும்படி வலியுறுத்துகிறது.

எனவே தற்காலத்தில் இரண்டு விடயங்கள் மிக முக்கியமானவை:-

1. மாற்று மதத்தவர்களோடு முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையோடு நடக்க வேண்டும்.

2. இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் அமைப்புக்கள் தமக்கிடையே மோதிக் கொள்ளாமல் சகோதரத்துவ வாஞ்சையால் கட்டுண்டு வாழ வேண்டும்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...