இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை தருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திடம் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கை அரசாங்கம் ஐ.நாவின் தீர்மானங்களை நிராகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிய தகவல்கள்,ஆதாரங்களை வழங்குவதற்காகவும் உரிய நீதித்துறை மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்குவதற்காகவும் தனது அலுவலகம் ஆதாரங்கள் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் பொறுப்புக்கூறல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை “ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையானது யதார்த்தத்தின் ‘கடுமையான திரிபுபடுத்தல் மற்றும் தவறான விளக்கம்’ என இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வின் முதலாவது கூட்டத்தில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கைக்கு பதிலளித்த இலங்கை,
மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையானது, இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்கவில்லை. அதன் பரிந்துரைகளை இலங்கை நிராகரிக்கிறது. நாட்டிற்குள் உள்ள நிலைமையை கடுமையாக திரித்து தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார்.
மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் (OCHCR) ஜனநாயகப் பின்னடைவை தெரிவு செய்திருப்பது வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டார்.
பொருளாதாரம், நிதி, அரசியல், தேர்தல், உள்நாட்டு, வரவு செலவுத் திட்டம் மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளின் அனைத்து அம்சங்களிலும் பரந்த மற்றும் தலையீடு செய்யும் கருத்துக்களை வெளியிடுவதில், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பங்கு அதிகரித்து வருவதாகவும் ஹிமாலி அருணதிலக கூறியுள்ளார்.
இலங்கையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் அதன் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியின் பின்னர் ஒரு வருடத்திற்குப் பின்னரும் இலங்கையின் பொருளாதார இன்னும் மீட்சி பெறவில்லை என ஐ.நா அறிக்கை கூறினாலும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இலங்கை நிபுணத்துவமிக்கவர்களுடன் இணைந்து பணியாற்றி மீட்சி பாதையில் பயணிப்பதாகவும் ஹிமாலி அருணதிலக சுட்டிக்காட்டினார்.