முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: மனித சங்கிலி போராட்டம்!

Date:

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந. ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதிவி விலகி வெளிநாட்டிற்கு சென்றுள்ள முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் நேற்று( 29)மாலை யாழில் அவசரமாக ஒன்றுகூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே ந.ஶ்ரீகாந்தா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய வரலாற்று வாழ்விடமாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்ற வடக்கு கிழக்கு உள்ளடக்கப்பட்ட தமிழ் மாநிலத்திலே தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மீறப்பட்டு வந்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையிலே குருந்தூர் மலையில் உள்ள ஆலயம் தொடர்பான வழக்கு விசாரணையை கையாண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்ட நிலையிலே தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்து நாட்டை விட்டு வெளியேறி சென்றிருக்கின்றார் என்கின்ற செய்தி தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்திலே தமிழ் மக்களினுடைய உணர்வுகள் தீவிரமாக அமைந்திருக்கின்றன. இதனை நாங்கள் எவரும் கைகட்டி பார்த்திருக்க முடியாது. இதனடிப்படையில் யாழ்ப்பாண மாநகரிலே ஒன்று கூடிய ஏழு தமிழ் கட்சிகள் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி சில தீர்மானங்களை எடுத்திருக்கின்றன.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஓர் ஏகமனதான தீர்மானங்களை இந்த விடயத்திலே எடுத்திருக்கின்றன.

எங்களுடைய கடுமையான கண்டனத்தையும் உணர்வுகளையும் உலக அரங்கிற்கு முன்னால் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இந்த விடயத்திலே சம்பந்தப்பட்டிருக்கிற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலே பகிரங்க வேண்டுகோளை அடுத்து வரும் தினங்களில் சமர்ப்பிப்பதென நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.

அத்துடன் நமது மக்களின் காத்திரமான எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதத்திலே எதிர்வரும் 04 திகதி புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திலே மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டத்தை நடாத்தவும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.

அந்தப் போராட்டம் காலையில் 9 மணிக்கு ஆரம்பிக்கப்படும். இது தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்கின்ற துண்டு பிரசுரங்கள் எதிர்வரும் நாட்களிலே விநியோகிக்கப்படும்.

இந்த விடயத்திலே மனித உரிமை அமைப்புகள், மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளிலே அக்கறை கொண்டு ஆர்வத்துடன் செயற்பட்டு வருகிற அமைப்புகள், மத ஸ்தாபனங்கள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவினரதும் ஆதரவை நாங்கள் கோரி நிற்கின்றோம்.

இந்த மனித சங்கிலி போராட்டம் வெற்றி அளிப்பதற்கு எமது மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்குவார்கள் என நாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்து இருக்கின்றோம் – என்றார்.

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...