தீவிரவாதம், வஹ்ஹாபிஸம், சம்பிரதாய முஸ்லிம்கள் என வழக்கமான பாணியில் எழுதப்படுகின்ற செய்தியைப் பிரசுரிக்க முன்னர் அதனை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் விட்டது நடுநிலை பேணும் ஒரு ஊடகத்துக்குப் பொருத்தமல்ல என்பதை நாங்கள் உங்களுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.
ஆகவே செப்டம்பர் 18 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட செய்தியில் உள்ள தவறைத் திருத்தி வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.
14 நாட்களுக்குள் நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால் உங்களது ஊடகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்தங்களை நாங்கள் துவங்கியிருக்கிறோம் என வெலிகம கல்பொக்க நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் எம்.யு.எம்.வாஸிக் குறித்த ஊடகத்துக்கு அறிவித்துள்ளார்.
வெலிகம கல்பொக்க புஹாரி பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை (15) நடந்த சம்பவத்தினை வஹ்ஹாபிஸ தீவிரவாதமாகக் காட்டுவதற்கு சிங்கள ஊடகமொன்று எடுத்த முயற்சி தொடர்பில் இந்தக் கடிதம் குறித்த ஊடகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதிகள் பொலிஸ் தலைமையகத்துக்கும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கும் இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கடிதத்தில் சம்பவ தினம் நடைபெற்ற விடயங்கள் எழுத்து மூலம் விபரிக்கப்பட்டுள்ளன.
வெலிகமையில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் சமயச் சூழலொன்றை உருவாக்கும் நோக்கில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த மார்க்க அறிஞரான மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களினால் புஹாரி பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது.
தற்போது இந்தப் பள்ளிவாசலுக்கு உரிமை கோரக் கூடியவனாக நான் மட்டுமே இருக்கிறேன்.
இந்த ஊர் மக்களுக்கோ வேறும் எவருக்குமோ இந்தச் சொத்துக்களுக்கு உரிமை கோருவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என அன்றைய தினம் குத்பா பிரசங்கத்தில் கதீப் தைக்கா அஹ்மது நாஸிர் ஆலிம் கூறினார்.
குத்பா முடிந்து தொழுகை நடந்ததன் பின்னர் வழமைபோன்று அறிவித்தல் வாசிப்பவர் எழுந்து நின்றார். அப்போது குத்பா நிகழ்த்திய நாஸிர் ஆலிம் அவர்கள் இனி இதுபோன்ற அறிவித்தல்கள் வாசிக்கக் கூடாது என எச்சரித்தார்.
பள்ளிவாசலில் உரிமை கோரல் சம்பந்தமான குத்பாவினால் கோபமடைந்திருந்த 800 – 1000 பேரளவிலான மக்கள் கைகலப்பில் ஈடுபட்டார்கள்.
பின்னர் கதீப் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விட்டு மக்கள் கலைந்து சென்றார்கள் என அன்று நடந்த சம்பவம் அந்தக் கடிதத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை தொடர்பான விடயமும் தப்லீக் இஜ்திமா தொடர்பான விடயமும் அன்றைய தினம் அறிவித்தலுக்காக தயாராக இருந்ததாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கல்பொக்க நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் குறித்த ஊடகத்துக்கு அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டில், உண்மைச் சம்பவத்துக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் அமைதியாக வாழும் ஊர்மக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இந்திய பிரச்சாரகரையும் அவருடன் வந்த ஒரு சிலரையும் திருப்திப்படுத்துவதற்காக இந்தச் செய்தி திட்டமிட்டு குறுகிய நோக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழும் இந்தப் பிரதேசத்தில் உங்களுடைய தவறான செய்தியினால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது என்பதனை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாதுகாப்பு அதிகாரிகளை தவறாக வழிநடத்தும் விதத்திலும் சமூகத்தில் பீதியைக் கிளப்பும் வகையிலும் பொய்யான கதைகளைப் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முனையும் போலியான ஊடகவியலாளர்களைப் பற்றி நாம் வருத்தமடைகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிகம சம்பவத்தை தவறாகச் சித்திரித்து வெளியிடப்பட்ட செய்தியின் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்துவற்கான ஊடக சந்திப்பொன்றையும் வெலிகம புஹாரி பள்ளிவாசலின் நிர்வாக சபையும் வெலிகம ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்தச் சந்திப்பில் வெலிகம ஜம்இய்யதுல் உலமா சார்பில் மௌலவி எம்.என்.எம்.ஷியாம் (முர்ஸி), ஊடகவியலாளர் மௌலவி எம்.யு.எம்.வாலிஹ் (அஸ்ஹரி), முன்னாள் மேயர் அல்ஹாஜ் எச்.எச்.முஹம்மத், அல்ஹாஜ் எம்.ஓ.அபூபக்கர், எம்.இஸட்.ஏ. பாஸி ஆகியோரும் கலந்து கொண்டனர்.