2022 (2023) உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இந்த வருடம் 263,933 விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன், 84 பேரின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற 166,938 பேரில் 149,487 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள், மீதமுள்ள 17,451 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.
இந்த வருடம் A/L பரீட்சைக்கு தோற்றிய 96,995 விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முடிவுகள் வெளியான 24 மணி நேரத்திற்குள், அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு முடிவு தாளை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.