அவிசாவளை – தல்துவ பகுதியில் கடந்த 20ம் திகதி நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்து, இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவிசாவளை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, மூன்று சந்தேகநபர்களை 7 நாட்களும், ஒரு சந்தேகநபரை 3 நாட்களும் தடுத்து வைத்து விசாரணை நடாத்த அவிசாவளை நீதவான் ஜனக்க பிரசன்ன சமரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
ஊடகவியலாளர் மீகொட பகுதியிலும், ஏனைய மூன்று சந்தேகநபர்களும் ஹங்வெல்ல மற்றும் தல்துவ ஆகிய பகுதிகளிலும் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி சூட்டை நடாத்திய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே, குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை வேவு பார்த்து, துப்பாக்கித்தாரிகளுக்கு தகவல் வழங்கிய குற்றச்சாட்டிலேயே குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிபடையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றைய தினம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்தே, சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.