மனித உரிமைகள் விவகாரங்கள் மற்றும் முன்னைய ஆணைக்குழுக்கள், குழுக்களின் விசாரணை அறிக்கைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பான இறுதி அறிக்கையை பூர்த்தி செய்வதற்காக ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பல தடவைகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.
மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களின் தேடல்களை ஆராய்ந்து, அறிக்கை அல்லது உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஜனவரி 21 ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவை நியமித்தார்.
இக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் உள்ளார்.
ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் இரண்டாவது அறிக்கை 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.