2021ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இலங்கை கடனாக பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர்களில் மேலும் 100 மில்லியனை மீள செலுத்தியுள்ளது.
பங்களாதேஷ் மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர் Md Mezbaul Haque இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு மூன்று தவணைகளில் செலுத்தும் வகையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷ் இலங்கைக்கு கடனாகக் கொடுத்தது.
இலங்கை குறித்த கடனை விரைவாக செலுத்த வேண்டுமென அண்மையில் பங்களாதேஷ் அறிவித்திருந்த நிலையில், ஓகஸ்ட் 17ஆம் திகதி முதல் தவணையாக 50 மில்லியன் டொலர்களை இலங்கை திருப்பிச் செலுத்தியது.
இரண்டாவது கட்டமாக நேற்று 100 மில்லியன் டொலர்கள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 50 மில்லியன் டொலர்கள் இம்மாத இறுதிக்குள் இலங்கை செலுத்துமென பங்களாதேஷ் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பங்களாதேஷுடன் நாணய பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, வழங்கப்படும் கால எல்லையின் பின்னர் இலங்கை மூன்று மாதங்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.