உடல் உறுப்பு மாற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் Basilixinab மருந்து பற்றாக்குறையால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் தடைபடுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதனைத்தவிர, நாய்க்கடிக்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வகையான தடுப்பூசிகளில் ஒன்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதன் காரணமாக குறித்த நோயாளர்களும் சிரமங்களை எதிர்நோக்குவதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
” மாற்று உறுப்புகள் நிராகரிக்கப்படுவதை தடுக்க நோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியான Basilixinab மருந்து காலதாமதமானதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட உறுப்பு மாற்று சிகிச்சைக்கு வருகை தரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, குறித்த மருந்தை வெளியிலிருந்து கொள்வனவு செய்வதெனில் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் செலவாகும்.
இந்நிலையில் , அம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரத்திலிருந்து உறுப்பு மாற்று சிகிச்சைக்கு வருகைத் தரும் நோயாளர்களுக்கு இத்தொகையை செலுத்தி வெளியிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வது மிகவும் சிரமமாக உள்ளது.
இத்தகைய காரணங்களால் சுகாதார அமைச்சர் உடனடியாக இவ்விடயத்தில் கவனம் செலுத்தி Basilixinab மருந்து தட்டுப்பாடு மற்றும் நாய்க்கடி தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கான தீர்வை உடனடியாக வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.