மிருகத்தனமான முற்றுகையினாலும் ஆக்கிரமிப்பினாலும் பலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கான எதிர்வினையே இது:  இலங்கை பலஸ்தீன் நட்புறவுச் சங்கம்

Date:

வன்முறையைத் தணிக்குமாறு அழைப்பு விடுக்கும் அதே வேளையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் முற்றுகையையும் பலஸ்தீனிய நிலங்கள் மற்றும் அதன் மக்கள் மீதான அட்டூழியங்களையும் உடனடியாக நிறுத்துமாறும் தனது நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பலஸ்தீன நட்புறவுக்கான இலங்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்பொழுது நடைபெற்று வரும் பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் யுத்தம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள பலஸ்தீன நட்புறவுக்கான இலங்கைக் குழு தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் இடையிலான வன்முறைகள் தீவிரமடைந்து வருவதைப் பற்றிய கடுமையான கவலைகளுக்கு மத்தியில், இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் இடையே நடந்து வரும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலஸ்தீனுடனான நட்புறவுக்கான இலங்கைக் குழு (SLCSP) தனது உளப்பூர்வமான அனுதாபத்தைத் தெரிவிக்கிறது.

கடந்த 75 ஆண்டுகளாக இஸ்ரேலிய அநீதிகளையும் பலஸ்தீனிய மக்களின் பிரிக்க முடியாத உரிமைகள் மீறப்படுவதையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் உலகளாவிய நிலைப்பாடு குறித்து பலஸ்தீனுடனான நட்புறவுக்கான இலங்கைக் குழு ஆழமான அக்கறை கொண்டுள்ளது.

உயிர் இழப்புகளை எப்படியும் மன்னிக்க முடியாது என்றாலும், இஸ்ரேல் மீதான பலஸ்தீனின் தற்போதைய தாக்குதல் தவிர்க்க முடியாத வளர்ச்சியாகும். பல தசாப்தங்களாக மிருகத்தனமான முற்றுகையினாலும் ஆக்கிரமிப்பினாலும் பலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கான எதிர்வினையே இது.

இது கண்டும் காணாதது போல் இருக்கின்ற உலகின் மௌனத்திற்கான பிரதிபலிப்பாகும். இந்த நிகழ்வில் கூட இந்த தாக்குதலை “தன்னிச்சையான பயங்கரவாத செயல்” என்று முத்திரை குத்தியுள்ள அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை” உள்ளது என்றும் வலியுறுத்தி வருகிறது.

பலஸ்தீன நிலங்கள் மீதான இஸ்ரேலின் திட்டமிட்ட படையெடுப்பும் சட்டவிரோத ஆக்கிரமிப்பும் 1948 இல் 1,300 நகரங்கள் மற்றும் கிராமங்களை உள்ளடக்கியிருந்த ஒரு நாட்டை மேற்குக் கரை மற்றும் காசா பகுதிக்கு மட்டும் சுருக்கியுள்ளது.

ஏறக்குறைய 5.9 மில்லியன் பலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு மத்திய கிழக்கில் அகதிகளாக வாழ்கின்றனர்.

இன்று உலகளவில் மிகப்பெரிய நாடற்ற சமூகமாக பலஸ்தீனர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

பலஸ்தீனர்களுக்கு எதிரான குடியேற்றவாசிகளின் வன்முறை கடந்த ஆண்டில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

காசா 16 ஆண்டுகளாக நலிவடையச் செய்யும் முற்றுகையின் கீழ் உள்ளது. அங்குள்ளவர்களுக்கு நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகையில் பாதிப் பேர் வேலையற்றிருக்கிறார்கள்.

மூன்றில் ஒரு பங்கினருக்கு சாப்பிடுவதற்கு போதுமான உணவு இல்லை. எரிபொருள் மற்றும் நீர் நெருக்கடியால் முழுப் பிரதேசமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலை எல்லாம் மறந்தே ஹமாஸின் தாக்குதல் தொடர்பில் உலகம் பேசிவருகிறது.

பலஸ்தீன நட்புறவுக்கான இலங்கைக் குழு வன்முறையைத் தணிக்குமாறு அழைப்பு விடுக்கும் அதே வேளையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் முற்றுகையையும் பலஸ்தீன நிலங்கள் மற்றும் அதன் மக்கள் மீதான அட்டூழியங்களையும் உடனடியாக நிறுத்துமாறும் தனது நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுதலான யுத்த தளவாடங்களையும் ஏனைய இராணுவ ஆதரவையும் இஸ்ரேலுக்கு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக பொருத்தமற்ற வன்முறையைத் தணிப்பதில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்றும் பலஸ்தீனுடனான நட்புறவுக்கான இலங்கைக் குழு கோருகிறது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தனது ஆணையை நிறைவேற்றி, இஸ்ரேலைப் பாதுகாப்பதை நிறுத்த வேண்டும் என்றும், நீதி நிலைநாட்டப்படுவதையும், உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், உயிர்கள் காக்கப்படுவதையும், பிராந்தியத்தில் அமைதி நிலவுவதையும் உறுதிசெய்யும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

1967 இல் விதிக்கப்பட்ட எல்லைக்குள் பலஸ்தீன மக்கள் சுதந்திரமானதும் இறையாண்மை கொண்டதுமான அரசில் தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் இரண்டு நாடுகளை உருவாக்குவதன் அடிப்படையில் இஸ்ரேல்-பலஸ்தீன மோதலுக்கு நியாயமானதும் நீடித்ததுமான தீர்வை நாங்கள் கோருகிறோம்.

உலகம் பலஸ்தீனர்களுடன் சமாதானம் பேசும் வரை மத்திய கிழக்கில் யதார்த்தமான சமாதானம் என்பது ஒரு மாயமாகவே இருக்கும்.

பலஸ்தீனர்களுக்கு சுயநிர்வாகம் மற்றும் சுயநிர்ணய உரிமைகள், அச்சம் மற்றும் ஒடுக்குமுறையின்றி வாழும் உரிமை, கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, வன்முறை அதிகரிப்பதைத் தடுத்து, நிலையான அமைதியை மத்திய கிழக்கில் நிலைநாட்ட முடியும்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...