அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பாக அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
நேற்றிரவு இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, சிட்னியில் 11 மாத கால விசாரணையை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் உள்ள சட்டங்களின்படி குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணிடம் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய முடியாது எனக் கூறினார்.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும், அதன் மூலம் இழப்பீடு கோரலாம் என்றும் தனுஷ்க குணதிலக கூறினார்.
அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக விரைவில் சிவில் வழக்கை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக் கிண்ணத்தை தவறவிட்டதற்கு வருத்தம் தெரிவித்த தனுஷ்க குணதிலக, கிரிக்கெட் விளையாட்டிற்கு இன்னும் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், விரைவில் பயிற்சியில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.