தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர்களை கல்லூரியுடன் இணைத்து அவர்களின் மூலம் பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்த பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2002 வகுப்பினர் சாம்பியன்களாக முடி சூடிக்கொண்டனர். தெல்தோட்டை மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த தொடரில் 2003 வகுப்பினருக்கு எதிராக இடம்பெற்ற இறுதிப்போட்டியிலேயே நவாஸ் தலைமையிலான அணி சாம்பியனாக தெரிவானது. அதேவேளை வயது மூத்த பழைய மாணவர்களுக்காக இடம்பெற்ற போட்டியில் சஹ்ரான் தலைமையிலான அணி வெற்றிவாகை சூடிக் கொண்டது.
தொடரின் திறந்தப் பிரிவில், சிறந்த துடுப்பாட்ட வீரராக 2003 வகுப்பு அணியின் தலைவர் அமீன் தெரிவு செய்யப்பட, சிறந்த பந்துவீச்சாளராக 2002 வகுப்பு அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாபி தெரிவானார். அதேவேளை மூத்தவர்களுக்கான பிரிவில் சிறந்த துடுப்பாட்ட வீரராக மனாப் தெரிவாக, சிறந்த பந்து வீச்சாளராக வெற்றிவாகை சூடிய அணியின் தலைவர் சஹ்ரான் தெரிவானார்.
“ஒன்றிணைவோம் பலம்பெறுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இத்தொடரின் இறுதியில் பாடசாலையின் அபிவிருத்தியின் நிமித்தம் தயாரிக்கப்பட்ட திட்டங்கள் அணிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.