கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பரவி வரும் கண்நோய் தொடர்பில், சுகாதாரத்துறை தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றது.
கொழும்பு மேற்கு, மத்திய, வடக்கு மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில் இந்த நோய் பரவி வருவதாக கொழும்பு சிரேஸ்ட சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த கண் நோய் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கண்கள் சிவத்தல், தொடர்ந்தும் கண்ணீர் வெளியேறுதல், கண்களில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களிடத்தில், 5 நாட்களுக்கு மேலாக இவ்வாறான அறிகுறிகள் நீடிக்குமாயின், உடனடியாக அவர்களை வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கண்நோய் தொற்றை குறைப்பதற்காக அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்தல், கண்களைத் தொடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிகளவிலான சிறுவர்களிடையே கண்நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து, அந்த பாடசாலையின் 6ஆம், 7ஆம், 8ஆம் தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.