கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாட்டில் பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் இரசாயனங்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பி.மெதவத்த தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் இரசாயனங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
உரிய முறையில் வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் மற்றும் இரசாயனப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை. அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிலையையே இது எடுத்துக்காட்டுகிறது.
உடனடியாக மருந்துகள் மற்றும் இரசாயனங்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் வைத்தியசாலைகளுக்கு இவற்றை விநியோகிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதேபோன்று வைத்தியசாலைகளில் தற்போது உள்ள பணி வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வெற்றிடங்கள் நிரப்பப்படாமையால் வைத்திய சேவைகளை வழங்குவதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.