இஸ்ரேல் – பலஸ்தீன் இடையேயான போர் தொடங்கி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் வீசுவதாக சமூக வலைதளங்களில் பலஸ்தீனர்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
பலஸ்தீன் வசம் எஞ்சி இருக்கும் காசா, மேற்கு கரை, ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிக்க இஸ்ரேல் அந்நாட்டின் மீது பல ஆண்டுகளாக பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் இராணுவம் காசாவுக்குள் நுழைந்து தாக்கிய, ஜெருசலேமில் உள்ள அக்சா மசூதிக்கு நுழைய முயன்றவர்களை விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக பாலஸ்தீன் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் ஏவுகணை தாக்குதலால் பலஸ்தீன் மக்கள் இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக இஸ்லாமியர்கள் மூன்றாவது முக்கிய புனித தலமாக இருக்கும் அக்சா மசூதிக்குள் பலஸ்தீனர்கள் தொழுகை நடத்த இஸ்ரேல் தடை விதித்து பதற்ற நிலையை மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் அக்சா மசூதிக்கு சென்றபோது இஸ்ரேலிய படைகள் காலணிகளுடன் நுழைந்ததாகவும், அங்குள்ள இஸ்லாமிய தலைவர்களின் கல்லறைகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு ஜோர்டான், பலஸ்தீன் நாடுகள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில்தான் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை பலஸ்தீனிலிருந்து இஸ்ரேலை நோக்கி திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. இஸ்ரேலின் ஆயுத கிடங்குகள், இராணுவ மையங்கள், விமான நிலையங்களை நோக்கி 5000 க்கும் அதிகமான ஏவுகணைகள் காசா பகுதியிலிருந்து பாய்ந்தன.
இது குறித்து ஹமாஸ் அமைப்பின் இராணுவ தலைவர் முஹம்மது தெய்ப் தெரிவிக்கையில், “அல் அக்சவை இஸ்ரேல் இழிவுபடுத்தியது. அந்த அமைப்பு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தியது. நாங்கள் எதிரியை எச்சரித்தோம். இதற்கு பதிலடி தர ஹமாஸ் ராணுவ நடவடிக்கையில் இறங்கியது.
இது நமக்கான நேரம். யாரெல்லாம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து உள்ளீர்களோ அவர்கள் அதை வெளியில் எடுங்கள்.” என்று அழைப்பு விடுத்தார்.
இதனை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் போர் பிரகடனத்தை அறிவித்தததுடன், உடனடியாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது.
இந்த தாக்குதல்கள் தொடரும் என்றும் கூறப்படுகிறது. பலஸ்தீன் மீது போர் தொடுக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நேற்று அனுமதி கிடைத்தது.
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 700 க்கும் அதிகமானோரும், பலஸ்தீனில் 400க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பலஸ்தீனில் வீசுவதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள்.
இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு இஸ்ரேல் போர்க் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூலம்: சர்வதேச ஊடகங்கள்