மொழி விருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அது தொடர்பான அடிப்படை அறிவு இன்றியமையாததாகும்.
மொழி, வெறுமனே சில எழுத்துக்களை மட்டும் கொண்டதல்ல. மாறாக, மனித உள்ளங்களை இணைக்கவும் பல மொழிகள் கொண்ட ஒரு தேசத்தில் புரிந்துணவர்வையும் சகவாழ்வையும் வளர்த்து பலமான தேசத்தை கட்டியெழுப்பவும் பங்களிப்பை வழங்கும் முக்கிய ஊடகமாகும்.
கேட்டல், வாசிப்பு ஆகிய இரண்டு திறன்களின் ஊடாகவும் பல மொழிசார் கருத்துக்களை உள்வாங்கும் பிள்ளைகள்,தனது பன்மொழி சார் ஆளுமையை விருத்தி செய்து கொள்கின்றனர்.
இந்த வகையில் பிள்ளையின் மொழி விருத்தி என்பது இந்த நாட்டில் பாகுபாடுகளைக் களைந்து தலை நிமிர்ந்து பிறருடன் கூடி வாழ்வதற்கான பங்களிப்பை வழங்குகிறது.
அதற்கமைய பாடசாலை மாணவர்களிடையே மொழிப்பிரயோக ஆற்றலை மேம்படுத்தல் செயற்பாட்டின் மூலம் மாணவர்களுக்கிடையிலான வலுவான மற்றும் அர்த்தமுள்ள தொடர்புகளை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டம் கடந்த 26ஆம் திகதி புத்தளம் பாலாவி சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
தேசிய கீதம், மற்றும் சுய பிரார்த்தனை நிகழ்வுகளுடன் இந்த நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாயின. நிகழ்வின் வரவேற்புரையை சர்வமத அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் யு. முஸ்னியா நிகழ்த்தியிருந்தார்.
தொடர்ந்து, மாணவர்களின் குழுக்கள் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் விசேட உரையை ADE, ZEO புத்தளம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஈ.ஏ.டபிள்யு.பண்டார அவர்கள் நிகழ்த்தினார்.
இதனையடுத்து பாலாவி சிங்கள வித்தியாலய மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
அடுத்ததாக மாணவர்களின் குழு மொழித்திறன் போட்டி இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து விசேட உரையை கொழும்பு IRES நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க நிகழ்த்தியிருந்தார்.
நிகழ்வின் தொடர்ச்சியாக பாலாவி முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இறுதியாக நன்றியுரையை புத்தளம் சர்வத அமைப்பின் உதவிச்செயலாளர் எச்.என்.சி. மல்காந்தி நிகழ்த்தினார்.
இந் நிகழ்ச்சியின் ஊடாக இளம் வயதிலேயே இவ்வாறான ஒரு வழிகாட்டல் கொடுக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்த புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பு ,இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமை மிகவும் வரவேற்புக்குரிய அம்சமாகும்.
தேசிய சமாதானப் பேரவை (NPC) , புத்தளம் கல்விப் பணிமனை (சமாதானக் கல்விப்பிரிவு), MWDt (பாலாவி) , WODEPT ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் புத்தளம் சர்வமத அமைப்பின் (DIRC) பூரண ஏற்பாட்டில் இந் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.