ரபா கேட் திறக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் எகிப்து இணைந்து தெற்கு காஸாவில் யுத்த நிறுத்தத்துக்கு இணங்கியதாகவும் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலும் ஹமாஸும் தெரிவித்துள்ளன.
ரபா கேட்டிலுள்ள இரண்டு எகிப்திய இராணுவ வீரர்கள் கூறியதை வைத்தே ரொய்ட்டர் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது.
அடைபட்டிருக்கும் காஸா மக்கள் வெளியேறிச் செல்வதற்கான ஒரே வழியாகக் காணப்படும் ரபா கேட்டினை தாம் திறந்தே வைத்திருப்பதாகச் சொல்லும் எகிப்து பலஸ்தீன் பக்கமாகவுள்ள வாசல் இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்திருப்பதால் இந்தப் பாதை வழியாகப் பயணிக்க முடியாமலிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் உதவிகள் கூட பலஸ்தீன மக்களுக்கு கிடைக்க முடியாமல் இருக்கிறது.
காஸா மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ரபா கேட்டைத் திறப்பதற்காக அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து நாடுகள் யுத்த நிறுத்தத்துக்கு இணங்கியதாக செய்திகள் வந்த போதும் காஸாவில் தற்போதைக்கு எந்த யுத்த நிறுத்தமும் மனிதாபிமான உதவிகளும் இல்லை என இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெடன்யாஹு தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட ஹமாஸின் ஊடகப் பிரதானி ஸலாமா மஹ்ரூப், ரபா எல்லையைத் திறககும் நோக்கம் குறித்து எகிப்து தரப்பிலிருந்து தமக்கு எந்தத் தகவலோ உறுதி மொழியோ வரவில்லை எனவும், ஊடகங்கள், குறிப்பாக இஸ்ரேலிய ஊடகங்கள் ஆதாரமற்ற செய்தியைப் பரப்புகின்றன எனவும் குறிப்பிட்டார்.