‘அல் அக்ஸா புயல்’ என்ற பெயரில் இஸ்ரேல் மீது காஸாவில் நிலை கொண்டுள்ள ஹமாஸ் போராளிகள் கடந்த சனிக்கிழமை காலை முதல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். வெறும் 30 நிமிடங்களில் 7,000 ஏவுகணைகளை ஏவியதால், இஸ்ரேல் திக்குமுக்காடிப் போயுள்ளது.
இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள், துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். இதில், ஏராளமானோர் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஏராளமான இஸ்ரேல் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் ஹமாஸ் போராளிகள் பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இந் நிலையில், கட்டார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
‘அல் அக்ஸா மசூதிக்குள் மீண்டும் ஊடுருவல் நடத்தப்பட்டு, பலஸ்தீன மக்களின் உரிமைகளை இஸ்ரேல் மீறியதே இதற்கு காரணமாகும்.
இதற்கான முழுப் பொறுப்பும் இஸ்ரேலையே சாரும். சர்வதேச சட்டத்தை அப்பட்டமான மீறுவதை நிறுத்தவும், பலஸ்தீனிய மக்களின் வரலாற்று உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், இந்த நிகழ்வுகளை சாக்குப்போக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இஸ்ரேலை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகம் அவசரமாக செயல்பட வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.