ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பலஸ்தீனின் நண்பர்களை ஒன்று கூட்டுவதற்குமென ‘பலஸ்தீன கொடி தினம்’ கடந்த சனியன்று (செப்டம்பர் 30) காலை நீர்கொழும்பில் உள்ள ஜெட்விங் புளூ ஹோட்டலில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து Ask Lanka Kite club மூலம் ஹோட்டல் கடற்கரையில் காற்றாடி திருவிழாவும் நடைபெற்றது.
பலஸ்தீன நட்புறவுக்கான இலங்கைக் குழு, பமுனுகம வை.எம்.சி.ஏ மற்றும் ஜா எல போர்ன் டு வின் ரிலேசன்ஷிப் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
காலி, மாவனல்லை, கொழும்பு, நீர்கொழும்பு, ஜா எல மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பலஸ்தீன நண்பர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் மதகுருமார்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மலேசியாவின் உயர் ஸ்தானிகர், மாலைத்தீவு, பங்களாதேஷ், சவூதி அரேபியா, ஓமான், துருக்கி, கியூபா, வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் எகிப்திய தூதரகத்தின் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மலேசிய, இந்தோனேசிய, பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர்கள் நட்புறவுப் பிரகடனங்களை வாசித்தனர். வை.எம்.சி.ஏ யின் நட்புறவுப் பிரகடனமும் இதனையடுத்து முன்வைக்கப்பட்டது.
பலஸ்தீனக் கொடி தினத்தை முன்னிட்டு அதிதிகளால் பலஸ்தீனக் கொடியமைப்பிலான கேக் வெட்டப்பட்டது.
இலங்கை கிட்டார் சங்கத்தைச் சேர்ந்த இக்பால் மற்றும் அப்துல்லா உமர் இணைந்து கிட்டார் மற்றும் ஊத் வாத்தியங்களையும் பலஸ்தீனத்தின் ஒற்றுமைக்கான பாடல்களையும் இசைத்தனர்.