சீகிரியா உள்ளிட்ட தொல்பொருள் இடங்களைப் பாதுகாத்தல், பிரபலப்படுத்துதல் மற்றும் சுற்றுலா பயணிகளை ஊக்குவித்தல் தொடர்பான முன்னோடித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது, எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வெற்றிகரமாக முடிக்க முடியும் என புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சீகிரியா தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் நேற்று (02) சீகிரிய தொல்பொருள் தளத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய பாரம்பரிய தளங்கள், இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு, இலங்கையில் கடலைச் சுற்றியுள்ள வர்த்தக மையங்கள், 17ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கோயில்கள், புராதன நீர்ப்பாசன முறை, மகாயானத்தால் ஈர்க்கப்பட்ட இடங்கள் போன்றவற்றை பிரபடுத்துவதற்கான செயல்முறை வேலைத்திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனடிப்படையில், மிஹிந்தலாய, புத்ருவகல தம்பேகொட, கண்டி காலச் சுவர்கள், ஓவியங்கள், வரலாற்றுக்கு முற்பட்ட குகைகள் மற்றும் குகைகள், நவீன கட்டிடக்கலை, அரங்கலே, ரித்திகல மனகந்த உள்ளிட்ட விகாரைகளை உலக பாரம்பரியத்தில் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
சிகிரியாவிலிருந்து புதிதாக தொடங்கப்பட்ட சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பார்க்கும் திட்டம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.
ஆகவே அவ்வாறான விடயங்களை சீராக செய்து முடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சீகிரியா மற்றும் தொல்பொருள் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துவது மிகவும் முக்கியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.