வருடாந்தம் சிறுவர்கள் தொடர்பான 5000 குற்றங்கள் பதிவாகி வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பல குற்றங்கள் போதைப்பொருள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தியதன் விளைவு என்றும் அவர் வெளிப்படுத்தினார்.
இலங்கையில் வருடாந்தம் குறைந்தது 5000 சிறுவர்கள் தொடர்பான குற்றச் செயல்கள் பதிவாவதாக தரவுகள் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர்கள் தொடர்பான குற்றங்களுக்கும், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கும் போதைப்பொருள் முக்கிய காரணியாக இருப்பதாக அவர் தெரிவித்ததோடு, கையடக்கத் தொலைபேசிகள் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஆயுதமாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
“சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை குறைக்க முயற்சித்த போதிலும், மொபைல் போன்களின் அதிக பயன்பாடு காரணமாக எங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைக்க வேண்டுமாயின் பெற்றோர்கள் வீட்டில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்,” என்றார்.
அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான மேல் மாகாணத்தை கருத்தில் கொண்டு, மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சிறுவர் தொடர்பான குற்றங்கள் அதிகமாக இருப்பதை புரிந்துகொள்ள முடியும் என்றார்.
இலங்கையில் சிறுவர் தொடர்பான குற்றங்களுக்கு மற்றொரு முக்கிய காரணியாக போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்