நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதான நகரில் தபால் நிலையதிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியாவில் பிரதான நகரில் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிறுவனத்துக்கு ஒப்படைக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பலரும் எதிர்ப்பு காட்டுவதுடன் பிரதானமாக நுவரெலியா மக்கள் பல்வேறு வழிகளில் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தபால் திணைக்களத்தின் எந்தவொரு சொத்துக்களையும் விற்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
” நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்களில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்,
நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை சுற்றுலா விடுதிகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது போராட்டத்திற்கு செவிசாய்க்காமல் தபால் திணைக்களத்தின் வளங்களையும் நாட்டின் வளங்களையும் விற்றால் அதனை தடுக்க உழைக்கும் மக்களையும் அனைத்து மத தலைவர்களையும் ஒன்று திரட்டுவோம்.
நாடு திவாலாகும் போது நாட்டை மேலும் நெருக்கடிகளுக்கு ஆளாக்காமல், நாங்கள் சொல்வதைக் கேட்டு கவனமாக சிந்தித்து நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்பதை நிறுத்துங்கள், அரசால் கடனை அடைக்க முடியாவிட்டால், நாட்டில் வீண்விரயம், ஊழலை தடுத்து, வருவாயை சரியான முறையில் பெற்று, கடனை அடைக்க நடவடிக்கை எடுக்கவும்.
அவ்வாறு இல்லையெனில், பொதுச் சொத்தை விற்று நாட்டின் கடனை அடைக்க நினைத்தால் அதற்கு வாய்ப்பே இல்லை.” என தெரிவித்தார்.