இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றிய மலையக தமிழ் மக்களுக்கு வேறுபாடுகளை காண்பிக்காமல் அவர்களை இலங்கை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத் தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (2) நடைபெற்ற ‘நாம் 200’ நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் 5000 க்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் பங்குபற்றியிருந்ததோடு, தமிழ் சம்பிரதாய முறைமைகளுக்கமைய ஜனாதிபதியை கோலாகலமாக வரவேற்றனர். இந்நிகழ்வானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொட்டகலை, மவுன்டவுன் தோட்டத்தின் திம்புல கீழ்ப்பிரிவு பகுதியில் இந்திய உதவியில் ஆர்பிக்கப்படவுள்ள 10,000 வீட்டுத்திட்டதின் முதல் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரால் நிகழ்நிலை முறைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனையடுத்து அட்டன் தொழில்பயிற்சி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர்கூடம் மற்றும் கனிணிப் பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வும் நிகழ்நிலை முறைமையில் இடம்பெற்றதோடு, பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பெற்றுக்கொடுத்த உதவிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த உதவி கிடைத்திருக்காவிட்டால் இன்றைய நிகழ்வைக் கூட சாதகமாக நடத்தியிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வை தொடர்ந்து மலையக தமிழ் மக்களின் புதிய வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கும். அவர்களுக்கான காணி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும்.
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வுகளை வழங்க பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இருக்கிறார்.
தெற்கில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் காணி உரிமையுடன் உள்ளனர். பெருந்தோட்டங்களில் வீடுகளை கட்ட கூட அவர்களுக்கு நிலம் இல்லை. ஆகவே, இந்த முறையை மாற்றியமைக்க வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வகையில் காணி உரிமையை வழங்க வேண்டும். இந்தியாவை போன்று அரசாங்கமும் அவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என்றார்