சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி (இன்று) அனுஷ்டிக்கப்படுகிறது.
1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம் பலஸ்தீனத்தில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை நினைவு கூரும் வகையில் வருடா வருடம் நவம்பர் 29 ஆம் திகதியை பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.
எனவே பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள விசேட கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறோம்.
பலஸ்தீனமும் அதன் மாண்புகளும்
பலஸ்தீனம் முஸ்லிம்களின் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு புனித பூமியாக திகழ்கிறது.
இது தொடர்பாக அல்-குர்ஆன் அல்-ஹதீஸில் ஏராளமான சிறப்புக்களும் முன்னறிவிப்புக்களும் வரலாறுகளும் கூறப்பட்டிருப்பதனால் ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் பலஸ்தீன மண் மாண்புமிக்க இடமாக கருதப்படுகிறது.
அல்லாஹு தஆலா பலஸ்தீன பூமியை பாக்கியம் நிறைந்த பூமி என்பதாக அல்-குர்ஆனிலே குறிப்பிடுகின்றான்.
“(அல்லாஹு தஆலா) மிகப் பரிசுத்தமானவன். அவன் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னும்) அடியாரைக் (கஅபாவாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதிலிருந்து (வெகுதூரத்திலிருக்கும் பைத்துல் மக்திஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.
அதைச்சுற்றி நாம் அருள் புரிந்திருக்கிறோம். நம் அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்).” (ஸூறா பனீ இஸ்ராயீல் : 01)
உலகில் நபிமார்களால் அமைக்கப்பட்ட மஸ்ஜித்களில் ஒன்றாகவும் இரண்டாவதாக வக்ஃப் செய்யப்பட்டதுமான மஸ்ஜிதுல் அக்ஸா இம்மண்ணில்தான் அமையப் பெற்றுள்ளது.
இறைத்தூதர்களில் அநேகமானோர் பலஸ்தீன மண்ணில் பிறந்து, வாழ்ந்து, அழைப்புப் பணியிலும் ஈடுபட்டு, அங்கேயே மரணித்து, நல்லடக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விண்ணுலகப் பயணத்தை பலஸ்தீனிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்தே ஆரம்பித்தார்கள். அவ்வாறே “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 16 அல்லது 17 மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள்…” (ஸஹீஹுல் புஹாரி : 399)
எனவே பல சிறப்புக்கள் பொருந்திய பூமியாக பலஸ்தீனம் விளங்குகிறது.
பலஸ்தீனும் அதன் வரலாறும்
கி.பி. 638 காலப்பகுதியில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் 02ஆவது கலீஃபா உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் பலஸ்தீனம் முஸ்லிம்கள் வசமானது.
அக்காலப்பகுதியில் எதுவித குழப்பங்களும் சிக்கல்களுமின்றி முஸ்லிம்களும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் நிறைவான சுதந்திரத்தோடும் உரிமைகளோடும் நீதமான முறையில் நடத்தப்பட்டனர் என வரலாறுகள் கூறுகின்றன.
கி.பி. 1800களின் பிற்பகுதிகளில் படிப்படியாக பல்வேறு சூழ்ச்சிகளும் இரகசிய ஒன்று கூடல்களும் சதித்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு பலஸ்தீனத்தை மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகள் மேற்குலக சக்திகளின் அங்கீகாரத்தோடு யூத சியோனிஸ்டுகளால் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து 02ஆம் உலகமகா யுத்தத்தின் பின்னர் யூதர்கள் பாரியளவில் பலஸ்தீனின் பல பகுதிகளில் குடியமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு படிப்படியாக ஆதிக்க ரீதியிலான குடியேற்றங்கள் தொடங்கப்பட்டு 1948.05.15 இல் இஸ்ரேல் ஒரு நாடாக அறிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் உருவானதிலிருந்து இற்றைவரைக்கும் பலஸ்தீன விடுதலை போராளிகளுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளுக்கும் மத்தியில் தொடர் மோதல்களும் போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டே வருகின்றன. அதன் தொடர்ச்சியே கடந்த அக்டோபர் 07 ஆம் திகதி தொடங்கி இன்றுவரைக்கும் இடம்பெற்றுவரும் மோதல்களாகும்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் இந்த கொடூர தாக்குதல்களினால் பலஸ்தீனத்தின் காஸா மற்றும் ஏனைய பகுதிகளில் 225,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 14,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தோரில் மூன்றில் இரு சதவீதம் பெண்களும் குழந்தைகளுமாவர். மேலும் 4,000 க்கும் மேற்பட்டோர் பற்றிய தகவல்கள் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.
35க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள், 52 மருத்துவ சிகிச்சை நிலையங்கள், 55க்கும் மேற்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் ஆகியன அழிக்கப்பட்டுள்ளன. 83 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள் தரைமக்கப்பட்டுள்ளதோடு 166 மஸ்ஜித்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாடுகளுக்கு ஜம்இய்யா விடுக்கும் வேண்டுகோள்
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கெதிராக உலகம் பூராகவும் போராட்டங்கள், எதிர்ப்புக்கள் கிளம்பிவருகின்றன. இலங்கைவாழ் முஸ்லிம்கள் மற்றும் உலமாக்கள் சார்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் இந்நடவடிக்கைகளுக்கெதிராக பல எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறது.
பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல்கள் தொடர்பில் 2023.10.26 ஆம் திகதி ஐ.நா பொதுச்சபையினால் உடனடி மற்றும் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
குறித்த தீர்மானத்தில் சிவில் உரிமைகளைப் பாதுகாத்தல், மனிதாபிமான சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்துவதை வலியுறுத்தல், காஸாவில் மனிதாபிமான பணிகளை தொடர்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளல், அத்தியாவசிய பொருட்கள், சேவைகள், நிவாரணங்கள், சிவில் பாதுகாப்பு போன்ற அம்சங்களை உறுதிப்படுத்தல் போன்ற பல விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.
இச்சிறப்புமிகு தீர்மானத்தை மேற்கொண்டமைக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் தனது ஜெனீவா விஜயத்தின்போது ஐ.நா வின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் அவர்களை பாராட்டி ஜம்இய்யா சார்பில் 2023.11.03 ஆம் திகதி உத்தியோகபூர்வ கடிதத்தையும் ஒப்படைத்தார்கள்.
ஐ.நாவின் மேற்படி தீர்மானத்திற்கு சர்வதேசங்களிலிருந்தும் 120 நாடுகள் ஆதரவாகவும் எதிராக 14 நாடுகளும் வாக்களித்திருந்ததுடன், 45 நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகி இருந்தன.
எனினும் குறித்த தீர்மானத்திற்கு சார்பாக எமது நாடாகிய இலங்கை அரசு வாக்களித்திருந்தது.
பொருளாதார நெருக்கடியான இச்சூழ்நிலையில் மனிதநேயம், நீதி மற்றும் நேர்மையை அடிப்படையாக வைத்து இவ்வாறான நிலைப்பாடொன்றை இலங்கை அரசு எடுத்தமையினையிட்டு இலங்கைவாழ் மக்கள் சார்பாக ஜம்இய்யா வரவேற்றதுடன் 2023.10.30 ஆம் திகதி இலங்கை அரசுக்கு உத்தியோகபூர்வமாக நன்றிகளையும் தெரிவித்தது.
அணிசேரா நாடுகளின் கொள்கையை பின்பற்றும் இலங்கை பலஸ்தீன் மக்களது விடுதலைப் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்தே வந்திருக்கிறது.
1975 ஆம் ஆண்டு இலங்கையில் பலஸ்தீன் தூதுவராலயம் ஸ்தாபிக்கப்பட்டதோடு அதற்கான இடத்தை சுதந்திர சதுக்கத்தில் இலங்கை அன்பளிப்புச் செய்தது. 1988 ஆம் ஆண்டு பலஸ்தீன் தேசம் பிரகடனம் செய்யப்பட்ட போது இலங்கை அதை அங்கீகரித்தது.
இஸ்ரேல் பலஸ்தீன் மீது மேற்கொண்ட அத்துமீறல்களுக்கு எதிரான ஐ.நாவின் சகல தீர்மானங்களுக்கும் இலங்கை ஆதரவு வழங்கியது.
அரபு முஸ்லிம் நாடுகள், ஐ.நா மற்றும் மேலை நாடுகளும் முன்வைத்துள்ள 1967 இல் வகுக்கப்பட்ட எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட, அல்-குத்ஸை தலை நகராகக் கொண்ட பலஸ்தீன் தேசம் உருவாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசு கொண்டுள்ளது.
அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இந்த தேசத்திற்கும் மக்களுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.
பலஸ்தீன் தொடர்பிலான ஜம்இய்யாவின் முன்னெடுப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சில தொடர்ச்சியான வழிகாட்டல்கள் பின்வருமாறு:
01) 2023.10.11
ஐவேளைத் தொழுகைகளில் குனூத்-அந்-நாஸிலாவை ஓதுவோம்.
https://acju.lk/news-ta/acju-news-ta/3087-media-release-qunoot
02) 2023.10.12
ஜம்இய்யா மூலம் பலஸ்தீனிய – இஸ்ரேல் மோதல் குறித்து சர்வதேச சமூகத்திற்கு முறையீடு.
https://acju.lk/en/news/acju-news/3088-appeal-acju
03) 2023.10.13
வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாப்போம். உலகில் இரண்டாவதாக வக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜித் மஸ்ஜிதுல் அக்ஸாவாகும்.
https://acju.lk/news-ta/acju-news-ta/3090-jumuah-guidance-acju
04) 2023.10.18
பலஸ்தீன் காஸா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நிலவவும் நீதி நிலைநாட்டப்படவும் ஸுன்னத்தான நோன்பு நோற்று துஆக்களில் ஈடுபடுவோம்.
https://acju.lk/news-ta/acju-news-ta/3095-let-s-fast-pray-for-palastine
05) 2023.10.18
காஸாவின் அல்-அஹ்லி அரபு வைத்தியசாலை மீதான தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது.
https://acju.lk/news-ta/acju-news-ta/3097-acju-strongly-condemns
06) 2023.10.19
ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் பலஸ்தீனிய தூதரகத்திற்கு இரங்கல் செய்தியை தெரிவிக்கச் சென்றனர்.
https://acju.lk/news-ta/acju-news-ta/3107-palestine-israel-war
07) 2023.10.19
இவ்வார ஜுமுஆ குத்பா பிரசங்கத்தின் தலைப்பு தொடர்பான வழிகாட்டல் (மஸ்ஜிதுல் அக்ஸாவும் புண்ணிய பூமி பலஸ்தீனும்)
https://acju.lk/news-ta/acju-news-ta/3099-jumuah-guidance-acju-aqsa
08) 2023.10.19
‘ஙாஇபான’ ஜனாஸா தொழுகை மற்றும் துஆ பிரார்த்தனை நடாத்துவது தொடர்பான வழிகாட்டல்.
https://acju.lk/news-ta/acju-news-ta/3100-gayib-janaza-parayer-palastine
09) 2023.10.23
பலஸ்தீன் தொடர்பில் 07 தீர்மானங்கள் – கெய்ரோவில் இடம்பெற்ற தாருல் இஃப்தா மாநாட்டில் ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் உட்பட 90 நாடுகள் பங்கேற்பு.
https://acju.lk/news-ta/acju-news-ta/3103-fatwa-conference-cairo-egypt
10) 2023.10.30
பலஸ்தீன் காஸா பகுதியில் போர் நிறுத்த முன்மொழிவுக்கு சார்பாக எமது தாய் நாடாகிய இலங்கை வாக்களித்துள்ளமையை ஜம்இய்யா வரவேற்கின்றது.
https://acju.lk/news-ta/acju-news-ta/3126-acju-commends-the-government-of-sl
11) 2023.11.03
பலஸ்தீன காஸா நெருக்கடி தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) பாராட்டு தெரிவித்துள்ளது.
https://acju.lk/news-ta/acju-news-ta/3131-un-geneva-acju-gaza
12) 2023.11.04
ஜெனீவா ஐ.நா சமூக மன்றத்தில் உரை; ஐ.நா பள்ளிவாசலில் ஜுமுஆ பிரசங்கம் – சமூக ஒற்றுமை குறித்து வலியுறுத்தல்.
13) 2023.11.21
மஸ்ஜிதுல் அக்ஸா பலஸ்தீன் மற்றும் காஸா மக்களுக்காக தொடர்ந்தும் குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்திப்போம்.
https://acju.lk/news-ta/acju-news-ta/3145-qunut-annazila-acju-fatwa
இவ்வாறாக பலஸ்தீனம் தொடர்பில் பல முன்னெடுப்புக்களையும் பொதுமக்களுக்கான வழிகாட்டல்களையும் ஜம்இய்யா வழங்கியிருக்கிறது.
பலஸ்தீனர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைக்குரலை எழுப்பி உலகளாவிய ரீதியில் அவர்களுக்கான ஆதரவை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையினால் நவம்பர் 29 ஆம் திகதி பலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் இடையிலான அண்மைய மோதல்கள் சர்தேச மட்டத்தில் உற்றுநோக்கப்பட்டு உடனடியாக சர்வதேச நாடுகள் தலையிட்டு இப்பிரச்சினைக்கு நீதியான முறையில் தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என பலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.
அத்தோடு இம்மோசமான ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள பலஸ்தீனிய மக்களின் விடிவுக்காக நாம் அனைவரும் எமது ஒவ்வொரு தொழுகையிலும் இருக்கரமேந்தி பிரார்த்திக்க வேண்டும் எனவும் இலங்கைவாழ் முஸ்லிம்களிடம் ஜம்இய்யா கேட்டுக்கொள்கிறது.
பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் இக்கொடூரமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலிருந்து அல்லாஹு தஆலா அவர்களை விடுவித்து நிலைமைகளை சுமூகமாக்கி வைப்பதோடு சுதந்திரமும் அமைதியும் நிம்மதியும் நிறைந்த பூமியாக அந்த பலஸ்தீனிய மண்ணை ஆக்கியருள்வானாக என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கிறது.