உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு குறித்த போட்டி இந்தியாவின் அஹமதபாத் நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் இந்த இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் அது இந்தியாவின் மூன்றாவது உலகக் கிண்ணமாகும் என்பதுடன், அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றால், அது அவுஸ்திரேலியா அணியின் 6 ஆவது உலகக் கிண்ணமாகும்.
1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் அவுஸ்திரேலியா அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளதுடன், இந்திய அணி 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இதுவரையில், ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 13 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன.
இதில் 8 போட்டிகளில் அவுஸ்திரேலியா அணியும் 5 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இதேவேளை, இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 150 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவுஸ்திரேலியா அணி 83 போட்டிகளிலும் இந்தியா அணி 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், இன்றைய இறுதிப்போட்டிக்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக இந்திய விமான படையின் வான் சாகசங்களும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அவுஸ்திரேலியாவின் துணை ஜனாதிபதி ரிச்சட் மார்லஸ் மற்றும் இந்தியாவின் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இறுதிப்போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அஹமதபாத்தை நோக்கி உள்நாட்டு மற்றும் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் வருகை தருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இந்திய அணி தற்போது வலுவான இடத்தில் உள்ளதாகவும், இந்திய அணியே உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளதாகவும் கிரிக்கெட் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.