அனேகமான சமூக வலைதளங்கள் தாம் வீரர்கள் என்ற தோரணையிலேயே செயற்படுகின்றன. எதை எடுத்தாலும் தமது பக்கங்களை மாத்திரம் தீர்மானித்து செய்திகளையும் தகவல்களையும் வெளியிடுகிறார்கள் என முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் இசட்.ஏ.எம். பைசல் தெரிவித்தார்.
பஹன ஊடக நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ் எம். எஸ். அப்துல் முஜீபின் வழிகாட்டலில் பஹன அக்கடமி முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துடன் இணைந்து நடாத்திய உலமா ஜெர்னலிஸம் என்ற மகுடத்திலான உலமாக்களை வலுவூட்டும் 3 நாள் பயிற்சிக்கருத்தரங்கின் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தெல்தொட்டைக்கிளையின் ஒத்துழைப்பில் மஹ்பலுல் உலமா அரபு கலாசாலையில் சமூக மாற்றத்துக்காக அறிவூட்டும் இப்பயிற்சிக்கருத்தரங்கு ஒக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெற்றது.
இப்பயிற்சிக் கருத்தரங்கில் திணைக்களப் பணிப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஒரு சிறந்த நிகழ்ச்சியினை மேற்கொண்டு இறுதிக் கட்டத்தில் இருக்கின்ற இந்த நிகழ்வுக்கு என்னையும் அழைத்த ஏற்பாட்டுக் குழுவிற்கும், பஹன மீடியா நிறுவனத்திற்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பஹன அகடமியின் பணிப்பாளர் அவர்கள் தமது உரையில் இந்தப் பாடத்திட்டத்தை தயாரித்து முதன் முதலாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துக்கு வந்து என்னை சந்தித்ததாகக் குறிப்பிட்டார்.
அன்றைய நாள் எனக்கு மிகவும் சந்தோஷமான நாளாக இருந்தது. இருந்த வேலைப்பளு காரணமாக ஒரு சில வாரங்களை நான் அவர்களிடம் கேட்ட போதும்,
அன்றைய தினமே நான் அவரிடம், இன்ஷா அல்லாஹ் நாடளாவிய ரீதியில் இதனை மேற்கொள்வதற்கு எங்களுடைய திணைக்களம் ஒத்துழைப்பு வழங்க எந்த நேரமும் ஆயத்தமாக இருக்கின்றது எனக் கூறினேன்.
இவ்விடத்திலும் நான் அதை மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் இந்த நிகழ்ச்சியினை எல்லா மாகாணங்களிலும் எல்லா மாவட்டத்திலும் செய்வதற்கான பூரண ஒத்துழைப்பை எங்கள் திணைக்களம் தரும் என்பதை மீண்டுமொருமுறை கூறிக்கொள்கிறேன்.
இந்த நிகழ்வை ஆரம்பிப்பதற்காக இங்கு ஓதுவதற்கு மிகப் பொருத்தமான குர்ஆன் வசனத்தை தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள்.
உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பூரணமாக நம்பி உங்களுக்கு இன்னொருவரிடம் கூற முடியாது. அதனைத் தீர விசாரிக்க வேண்டும். சரியானதை மாத்திரம் கூறவேண்டும்.
இன்று இலங்கையில் காணப்படும் அநேகமான சமூக ஊடகங்களில் எல்லாவற்றிலும் அவர்கள் தான் வீரர்கள் என்ற ஒரு நிலை காணப்படுகிறது. எதை எடுத்தாலும் அவர்களுடைய பக்கத்தை மாத்திரம் தீர்மானித்து சில ஆக்கங்களை வெளியிடுகின்றார்கள்.
மறுமைநாளில் இதற்கு அல்லாஹ்விடம் பதில் கூறித்தான் ஆகவேண்டும் என்ற நிலை அவர்களுக்கு ஏனோ இன்னும் புலப்படவில்லை.
புனித திருக்குர்ஆனை ஓதி அதற்கு மொழிபெயர்த்த அந்த இரு சகோதரர்களும் ஒரு சிறந்த கருத்தை ஆரம்பத்திலேயே தந்தருளினார்கள்.
ஊடகம் என்பது சமநிலையில் இருக்க வேண்டும். சீரானதாக இருக்க வேண்டும். மேலும் தெளிவானதாக இருக்க வேண்டும்.
சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் விசேடமாக முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்ற பெரும் சவால் ஊடகம் தான்.
தற்போது வளைகுடாவில் நடைபெறுகின்ற, பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடைபெறுகின்ற நிகழ்வாக இருக்கலாம்.
ஈராக்கில் நடைபெற்ற நிகழ்வாக இருக்கலாம். நீங்கள் எதை எடுத்து ஆழமாக சிந்தித்துப் பார்த்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக திட்டமிட்டு இயங்குகின்ற ஒரு பக்கச் சார்பான வெளியீடுகள் காரணமாக பாரிய சவால்களை நாம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.
எனவே அவ்வாறான சவால்களை விளங்கிக்கொள்வதற்கும். அதற்கு மாற்று வழிகளை அமைப்பதற்காகவும் ஒரு சிறந்த தலைப்பை பஹன மீடியா என்ற இந்த நிறுவனம் காலத்திற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் என்ற வகையில் பஹன ஊடக நிறுவனத்தில் இருக்கின்ற சகல ஊழியர்களுக்கும் அதன் தலைவர், பணிப்பாளர் உட்பட சகலருக்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.
தெல்தோட்டை ஜம்இய்யாவின் தலைவர் அவர்களின் உரையில் மிகவும் வரவேற்கக்கூடிய சிந்திக்கக்கூடிய பல விடயங்களை முன்மொழிந்தார். அதில் நியாயமான தலைப்புக்களில் நாங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றோம். ஆயினும் இன்னும் அதை எங்களுக்கு அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
உதாரணமாக பள்ளிவாசல்களில் கடமை புரியும் மௌலவிமார்களுக்கும் கதீப்மார்களுக்குமான ஒரு பயிற்சி. அதேபோன்று பள்ளி பரிபாலன சபைகளில் இருக்கின்ற உறுப்பினர்கள் தலைவர்களுக்கான ஒரு பயிற்சி. இதற்கு நாங்கள் மீட்ஸ் எனும் அமைப்புடன் கலந்தாலோசித்துள்ளோம்.
முதலாவதாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற நவம்பர் மாதம் 24,25 ஆம் திகதிகளில் எங்களுடைய திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயிற்றுவித்து அவர்களை வளவாளர்களாக பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் இருக்கின்ற பள்ளிவாயல் பரிபாலன சபை அதேபோன்று கதீப் முஅத்தின்மார்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கும் நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்.
பாடசாலையை எடுத்துக்கொண்டால் ஆசிரியர்களுக்கு பல வழிகளில் இடைவிடாத பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆயினும் பள்ளிவாசலில் அதேபோன்று அரபு மதரஸாக்களில், குர்ஆன் மத்ரஸாக்களில் அதைப் பார்ப்பதும் இல்லை. கேட்பாரற்ற நிலையில் இருக்கின்றது.
அவர்களுக்கான பயிற்சிகளும் சரியான முறையில் திட்டமிட்ட அமைப்பில் இன்னும் இலங்கை நாட்டில் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவலைக்கிடமான விடயம்.
இது சம்பந்தமாக துறைசார்ந்த அறிஞர்களிடம் நாங்கள் கலந்தாலோசித்து அதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலங்கையில் காணப்படுகின்ற சகல அரபு மத்ரசாக்களுக்கும் பொதுவான ஒரே பாடத்திட்டம்.
அமுல்படுத்தப்படும். அதற்கான முயற்சிகளை சகல வழிகளிலும் மேற்கொண்டு வருகிறோம். அந்த அரபு மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டம் பூரணமாக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது.
உங்களுக்கு தெரியும். 2019 ஆம் ஆண்டு இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட ஒரு கறைபடிந்த நிகழ்வு. அதன் பின்னால் அரபு மத்ரஸாக்கள், குர்ஆன் மதரசாக்கள், சம்பந்தமாக தேடுதல்கள் நடத்தப்பட்டன. அதனடிப்படையில் இந்தப் பாடத்திட்டம் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டு அவர்களும் அதை படித்ததன் பின்னால் அது அமுல்படுத்தப்படும்.
நாங்கள் தயாரித்த அரபு மொழியிலான பாடத்திட்டத்தை அவர்களுக்கு அறபு தெரியாது என்ற வகையில் அதை சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு நாங்கள் முற்பட்ட பொழுது இருபது இலட்சம் ரூபாய்கள் அதற்கான கூலியாக கேட்கப்பட்டது இருபது இலட்சம் ரூபாய் இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ வேலைகள் எங்களால் செய்யலாம்.
பிறகு நாங்கள் ஒரு சகோதரனுடன் கதைத்த பொழுது குறைந்த விலையில் அதனை மொழிபெயர்ப்பதற்கு அதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஒரு நிறுவனம் பூரணமாக அந்த தொகையை எங்களுக்கு தந்து உதவியது.
தற்பொழுது அதன் மொழி பெயர்ப்பு 98 வீதம் முடிவடைந்த நிலையில் உள்ளது.
சகல பள்ளிகளிலும் ஒரு நாளில் ஒரே தலைப்பு எனும் விடயத்தை இன்ஷா அல்லாஹ் இதற்கு அடுத்ததாக நாங்கள் அமுல்படுத்துவதற்கு எண்ணுகிறோம். சென்ற மாதங்களில் நாங்கள் இதில் கூடுதலாக கவனம் செலுத்தினோம்.
மிக விரைவில் அதற்கான அறிவுறுத்தல்களை சகல பள்ளிவாசல்களுக்கும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதேநேரம் நேரத்தையும் நாங்கள் வரையறுத்துக் கொடுப்போம். சில பள்ளிவாசல்களில் 45, 50 நிமிடங்கள் இழுப்பார்கள்.
அனேகமான தொழில் செய்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம்தான் வெள்ளிக்கிழமைகளில் சலுகை தந்திருக்கின்றார்கள். அந்த நேரங்களில் அவர்கள் நீண்ட நேர உரைகளைக் கேட்பதன் ஊடாக பகல் சாப்பாடு எடுக்க முடியாமல் மீண்டும் தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. எனவே இந்த நேரக் கட்டுப்பாடு முக்கியம் என்று நாங்கள் கருதினோம். அதன் அடிப்படையில் நாங்கள் தற்பொழுது அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
சான்றிதழ் வழங்கும் இறுதி அமர்வில் உரை நிகழ்த்திய பஹன மீடியா அகடமியின் பணிப்பாளரும் முன்னாள் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரசாரப் பணிப்பாளருமான ‘மாத்திய கீர்த்தி’ ஹில்மி முஹம்மத் தமதுரையில்,
தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு அவலங்களை சந்தித்து வரும் இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் மூலம் முஸ்லிம்கள் தொடர்பாக தவறான கருத்துக்களும் பிரிவினைவாத கோட்பாடுகளும் பரப்பப்பட்டு வருகின்றன.
முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமையாகவும் பரஸ்பர நல்லெண்ணத்துடனும் வாழ வழிகாட்டும் பாரிய பொறுப்பு உலமாக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
எனவே தான் தூய இலங்கையைத் தோற்றுவிக்கும் இலட்சியப்பாதையில் செயல்பட்டு வரும் நியூஸ்நவ் ஊடகத்தின் பஹன மீடியா நிறுவனம் இப்பயிற்சிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. இதனைத்தேசிய மட்டத்தில் எடுத்துச்செல்ல முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நேசக்கரம் நீட்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.
மூன்று தினங்களாக நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையின் போது தொடர்பாடல் வழிமுறைகள், நவீன தொடர்பு சாதனைங்களை சமூக முன்னேற்றத்துக்கு பயன்படுத்துதல், தஃவாப்பணிக்கு கைபேசி நுட்பத்தைப் பயன்படுத்தல், செயற்கை நுண்மதியை தஃவாவுக்குப் பயன்படுத்தல், ஆக்கப்பூர்வமான சமூக வளர்ச்சிக்கு மிம்பர் மேடை முதல் பாங்கு முதலான இஸ்லாமிய ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவும் பயிற்சியும் வழங்கப்பட்டன.
இப்பயிற்சிக்கருத்தரங்கில் முன்னாள் மீள் பார்வை ஆசிரியரும் நிவ்ஸ் நவ் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியருமான பியாஸ் முஹம்மத், பஹன மீடியா முகாமைத்துவக் குழு அங்கத்தவர்களான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் இஸ்பஹான் சாப்தீன், அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி பவாஸ் அன்பியா மற்றும் ஆசிரிய ஆலோசகர் பஸ்லுர் ரஹ்மான் (நளீமி) ஆகியோரும் வளவாளர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
இப்பயிற்சிக்கருத்தரங்கில் சுமார் 50 இற்கும் மேற்பட்ட உலமாக்கள் சமூக ஆர்வலர்கள், மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டதுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தெல்தோட்டை கிளைத்தலைவர் காதிநீதிபதி மௌலவி எச்.எம்.எம். இல்யாஸ் மற்றும் மஹ்பளுல் உலமா அரபுக் கலாசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் அப்துர் ரஸ்ஸாக் ஆகியோரும் சிறப்புரை நிகழ்த்தினார்.