மஹ்மூத் அப்பாஸும் கையாலாகாத அரபுலக சர்வாதிகளில் ஒருவரே – லத்தீப் பாரூக்

Date:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆதரவுடன்; காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இன சம்ஹாரம், அரபுலகின் இராணுவ மற்றும் அரசியல் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்தியுள்ளது

பலஸ்தீன பொது மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன சம்ஹாரம் மற்றும் காஸாவை நாசப்படுத்தும் அதன் நடவடிக்கைகள் என்பன அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் கண்மூடித்தனமான ஆதரவுடன் இடம்பெற்று வருகின்றன.

இது காஸாவை சுற்றியுள்ள மதச்சார்பற்ற அரபு சர்வாதிகரிகளின் அரசியல் மற்றும் இராணுவ வங்குரோத்து நிலையையும் புடம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த இன ஒழிப்பு நடவடிக்கையை நிறுத்த அவர்கள் இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக பலஸ்தீன மக்களை நீரின்றி, உணவின்றி, மின்சாரமின்றி, மருந்துகள் இன்றி எரிபொருள் இன்றி ஏனைய எந்த அத்தியாவசிய வசதிகளும் இன்றி வாட்டி வதைத்து அன்றாடம் கொத்து கொத்தாக கொன்று குவித்து வரும் காட்டுமிராண்டித் தனத்தை கண்டிக்கக் கூட வக்கின்றி காஸாவை சுற்றி வாழும் அரபுலகம் ஸ்தம்பித்துப் போய் உள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இன்றைய கேவலமான மிகவும் துரதிஷ்டவசடமான நிலை என்னவென்றால் இந்த அரபுலக சர்வாதிகார ஆட்சியாளர்கள் தமது இராஜதந்திர பிரதிநிதிகளை கூட இன்னமும் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ்வில் இருந்து திருப்பி அழைக்கத் துணிவில்லாமல் உள்ளமைதான்.

ஜோர்தான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேன், சூடான், மொரோக்கோ ஆகிய நாடுகளில் இஸ்ரேலிய தூதரகங்களில் இன்னமும் அதன் தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் பொலிவியா, கொலம்பியா, சிலி போன்ற நாடுகள் பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனஒழிப்பை கண்டித்து இஸ்ரேலில் உள்ள தத்தமது தூதுவர்களை திருப்பி அழைத்துள்ளன.

மூன்று வார காலமாக மேற்கொள்ளப்பட்ட ஓய்வற்ற குண்டு வெடிப்புக்கள் மூலம் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பின், காஸாவின் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதி தரை மட்டமாக்கப்பட்ட பின், பஹ்ரேனும் ஜோர்தானும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி காஸாவில் இனஒழிப்பை நிறுத்துமாறு இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டதோடு தமது தூதுவர்களையும் திருப்பி அழைத்துக் கொண்டன.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது பத்தாயிரத்தை தாண்டிவிட்டது. இஸ்ரேல் தொடர்ச்சியாக யுத்த நிறுத்தக் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்து வருவதால் அயர்லாந்தின் ஷின்பேன் கூட தனது தூதுவரை திருப்பி அழைத்துக் கொண்டது.

இஸ்ரேலில் முடிவுகளை எடுக்கும் செயற்பாட்டில் மக்கள் பங்களிப்புக்களை வழங்குகின்றனர். அந்த வகையில் அவர்கள் அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்துகின்றனர். ஆனால் அரபுலகம் முழுவதும் ஓரங்க சர்வாதிகார ஆட்சியே இடம் பெறுகின்றது.

ஆதரவை இழந்து தவிக்கும் பலஸ்தீன சிறுவர்கள்

அங்கே பொதுவாக மக்களும் குறிப்பாக புத்திஜீவிகளும் அடிமைகளைப் போலவே நடத்தப்படுகின்றனர். கொஞ்சமாவது சுதந்திரத்தையும் தமக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்ள அவர்களில் பலர் மேற்குலக நாடுகளில் குடியேறி உள்ளனர்.

பலஸ்தீனத்தை சுற்றியுள்ள கையாளாகாத அரபுலக சர்வாதிகள் மத்தியில் பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் இடம் பெறுகின்றார். அவர் அங்கே தேர்தலை நடத்தாமல் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கின்றார்.

அதற்கான ஆதரவும் நிதி உதவியும் அப்பாஸுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலிடம் இருந்து தாராளமாகக் கிடைக்கின்றன. அவற்றைப் பெற்றுக் கொண்டு அவர் இஸ்ரேலின் கொடிய நிகழ்ச்சி நிரலை தமது மக்களுக்கு எதிராகவே அமுல் செய்து வருகின்றார்.

இந்த மதச்சார்பற்ற சர்வாதிகார ஆட்சியாளர்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்பனவற்றால் மிகக் கவனமாக வடிகட்டித் தெரிவு செய்யப்பட்டவர்கள். தத்தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவகையான இஸ்லாமிய சக்திகளும் தலைதூக்கி விடக் கூடாது.

அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தெளிவான செய்தியும் கட்டளையும் ஆகும். மேற்குலக நாடுகளைப் பொருத்தமட்டில் பொதுவாக உலகின் எந்த ஒரு பகுதியிலும் குறிப்பாக இஸ்லாத்தின் பிறப்பிடமான மத்திய கிழக்கில் இஸ்லாமோ அல்லது இஸ்லாத்துக்கு ஆதரவான ஒரு அரசியல் சக்தியோ அல்லது அமைப்போ தலைதூக்கி விடக் கூடாது என்பதில் அவர்கள் எப்போதுமே மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் இருப்பவர்கள்.

உதாரணத்துக்கு 1991 டிசம்பரில் அல்ஜீரியாவில் இடம்பெற்ற தேர்தலில் இஸ்லாம் சார்பு கட்சியான எப்ஐஎஸ் 188 ஆசனங்களை வென்று அந்தத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது.

ஆனால் பிரான்ஸும் அல்ஜீரியாவில் உள்ள அதன் மதச்சார்பற்ற கைக்கூலிகளும் சேர்ந்து இஸ்லாமிய சக்திகளை நசுக்கி எப்ஐஎஸ் ஆட்சிபீடம் ஏற விடாமல் தடுத்து மதச்சார்பற்ற இராணுவ சர்வாதிகார ஆட்சியை அங்கு ஸ்தாபித்தன.

எகிப்தில் 2010/11 அலபு வசன்த போராட்டத்தின் பின் இடம்பெற்ற தேர்தலில் இஸ்லாமிய ஆதரவு சகோதரத்துவ இயக்கத்தின் முஹம்மத் முர்ஷி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.

காஸாவில் தினசரி இடம்பெறும் மூர்க்கத்தனமான விமானத் தாக்குதல்களால் இடிபாடுகளுக்குள் சிக்கித்தவிக்கும் சிறுவர்கள்

இதனால் விழிப்படைந்த அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் என்பன சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் என்பனவற்றை ஒன்றிணைத்து 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு செயற்கையான பல பிரச்சினைகளை எகிப்தில் உருவாக்கி முர்ஷியை பதவியில் இருந்து வீழ்த்தின.

அதன் பிறகு அங்கும் மேற்குலகினதும் இஸ்ரேலினதும் ஆதரவை வென்ற இராணுவ சர்வாதிகாரி அப்துல் பத்தாஹ் சிசி பதவியில் அமர்த்தப்பட்டார்.

சவூதி அரேபியாவுடன் 100 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுத உடன்படிக்கையை செய்து கொண்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஆதரவின்றி சவூதி அரேபிய அரசால் இரண்டு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என பகிரங்கமாகக் கூறினார்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பில்லியன் கணக்கான டொலர்களை கொடுத்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் முக்கியமான ஒரு ஆயுத இறக்குமதி நாடு தான் சவூதி அரேபியா.

அதனால் பலஸ்தீன மக்களைக் காப்பாற்றும் நோக்கில், இந்த ஆயுதங்கள் எதையும் அது ஒரு போதும் இஸ்ரேலுக்கு எதிராகப் பாவிக்கப் போவதும் இல்லை. பாவிக்கவும் முடியாது. அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டிய அதன் நிலைமையும் இஸ்ரேலுடனான அதன் இரகசிய உறவுகளும் ஒரு போதும் இதற்கு வழிவிடப் போவதில்லை.

சவூதி அரேபியா தனது ஆயுதங்களை அண்மைக் காலத்தில் யெமன் தேசத்துக்கு எதிராகத் தான் பாவித்துள்ளது. யெமனில் இந்த ஆயுதங்களைப் பாவித்து நவீன உலகின் மிகவும் மோசமானதோர் மனிதாபிமான நெருக்கடியை அங்கு தோற்றுவித்தது. மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி யெமன் மக்களை அது கொன்று குவித்ததோடு யெமனின் உள்கட்டமைப்பையும் முற்றாக சிதைத்து விட்டது.

இஸ்ரேலின் மூர்க்கத்தனமான அடக்குமுறைக்கு கடந்த பல தசாப்தங்களாக ஆளாகி உள்ள பலஸ்தீன மக்களைக் காப்பாற்ற சவூதி அரேபியா இதுவரை எதையும் செய்ததில்லை.

மறுபுறத்தில் பலஸ்தீன மக்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுக்கு பல உதவிகளைச் செய்துள்ளது. செய்து வருகின்றது. 2020ம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகமான ஆபிரகாமின் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள பிரதான நாடான அமீரகம் அக்டோபர் எட்டாம் திகதி ஒரு அறிக்கையை விடுத்துள்ளது.

அதில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் இயக்கம் மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல் என்றும், இஸ்ரேலிய நிலைகள் மீது ஆயிரக்கணக்கான ரொக்கட்டுக்களை ஏவியமை மோதல்களைத் தூணடும் ஒரு பாரதூரமான செயல் என்றும் வர்ணித்துள்ளதோடு இஸ்ரேலிய மக்களை பணயக் கைதிகளாக சிறைப்பிடித்தமைக்காக ஹமாஸ் இயக்கத்தை வன்மையாகக் கண்டித்தும் உள்ளது.

22 அரபு நாடுகளில் ஒன்பது நாடுகள் உடனடியான யுத்த நிறுத்தத்துக்கான அழைப்பை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விடுத்துள்ளன.

பலஸ்தீனத்தின் காஸா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் இடம்பெற்ற அப்பட்டமான மனிதாபிமான சட்டங்களின் மீறல்களை வகைப்படுத்த தவறியமையானது, அந்த நடைமுறைகள் அங்கு தொடர காட்டப்பட்ட பச்சை விளக்குக்கு சமமனானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யார் யாருக்கு ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் தவிக்கும் மக்கள்

அரபுலகில் மிகவும் பிரபலமான மற்றும் மிகப் பெரிய நாடான எகிப்து பலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில் தனது ஒரு விரலைக் கூட உயர்த்தப் போவதில்லை. காரணம் அமெரிக்க நிதி உதவிக்கு அடிமைபட்டுள்ள அந்த நாட்டின் இன்றைய நிலை.

எவ்வாறேனும் மீண்டும் ஒரு தடவை அரபு வீதிகள் தான் சமாதானத்துக்காக அமைதியாக வேண்டுதல்; நடத்திக் கொண்டிருக்கின்றன. கஸப்லங்கா, அல்ஜியர்ஸ், டூனிஸ், கெய்ரோ, அம்மான், பேரூட், டமஸ்கஸ், பக்தாத், மனாமா ஆகிய பிராந்திய தலை நகரங்களில்  பலஸ்தீன மக்களுக்கு அதரவு தெரிவித்து இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள் இங்கே குறிப்பிடத்தக்கவை.

பலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தியும், அவர்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதலகளைக் கண்டித்தும், அந்த மக்கள் எதிர்கொண்டுள்ள பயங்கரமான வாழ்வுச் சூழலில் கவனம் செலுத்தியும் இந்த ஆர்ப்பாட்டங்களின் போது கோஷங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் அரபுலக சர்வாதிகாரிகள் பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை. உதாரணத்துக்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கான தனது 14.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவித் திட்டத்தை அறிவித்த அடுத்த தினமே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் மூன்றாவது தடவையாகவும் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார்.

அங்கு அவர் பலஸ்தீனர்களை கொல்வதை சற்று குறைத்துக் கொள்ளுங்கள் நிறுத்தத் தேவையில்லை என்ற ரீதியில் தான் கருத்து வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கின் பரிதாபகரமான நிலை இதுதான். இந்தப் பின்னணியில் உலகப் பகழ் பெறற புரட்சி வீரர் சே குவேராவின் மகள் அலீடா குவேரா அரபு சர்வாதிகாரிகள் ஏன் அமைதியாக இருக்கின்றார்கள் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். காஸாவிலும் மேற்குக் கரையிலும் பலஸ்தீன மக்களை காப்பாற்றாமல் எதற்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள் என்று அவர் கேட்டுள்ளார்.

எர்னஸ்ட் சே குவேரா ஆர்ஜன்டீனாவை சேர்ந்த ஒரு மார்க்ஸிஸ புரட்சிவாதி. அவர் ஒரு மருத்துவர், எழுத்தாளர், கெரில்லா தலைவர், இராணுவ கோட்பாட்டாளர் ஆவார்.  63 வயதான அவரது மகள் அலீடா குவேரா விடுத்துள்ள ஒரு அறிக்கையில்

“ஓ அரபிகளே! நீங்கள் எதற்காக காத்திருக்கின்றீர்கள்? காஸாவில் என்ன நடக்கின்றது? அது எப்போது நிறைவடையும்? இஸ்ரேலின் கனவு நனவாகும் வரை நீங்கள் காத்திருக்கின்றீhகளா? உங்கள் சகோதர சகோதரிகளையும் உங்கள் இரத்தத்தையும், உங்கள் கலாசாரத்தையும் சமயத்தையும் சேர்ந்த மக்களை காப்பாற்ற வேண்டிய நேரம் அல்லவா இது. பலஸ்தீன மக்களைப் பாதுகாக்க அரபு ஆட்சியாளர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் அல்லவா இது.

நான் உங்களில் இருந்து மிகவும் தூரத்தில் வாழுகின்றேன். ஆனால் எனது உள்ளம் பலஸ்தீன சகோதர சகோதரிகளிடமே இருக்கின்றது. நான் ஒரு மருத்துவ மாது. என்னால் காஸாவுக்குள் பிரவேசிக்க முடியுமென்றால் நான் இந்நேரம் அவர்களோடு நின்று அவர்களுக்கு உதவுவேன்.

நான் என் உயிரைப் பற்றி கவலை படவில்லை. உங்களது போராட்டத்தை பலஸ்தீன மக்கள் தொடருகின்றார்கள். முன்னேறுங்கள் வெற்றி வரை. ஓன்றில் மரணம் அல்லது சுதந்திரம்” என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பலஸ்தீன மக்களுக்காக பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன. அவற்றில் அரபு சர்வாதிகாரிகள் மட்டும் அல்ல சியோனிஸ யூதத்தின் கொடிய மற்றும் தீய பண்புகளும், அவற்றின் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதரவாளர்களும் தோலுரிக்கப்படுகின்றனர்.

அரபிகள் அவர்களது ஆட்சியாளர்களின் தயவில் தங்கி உள்ளனர். மத்திய கிழக்கு ஒரு கொந்தளிக்கும் எரிமலையாக காணப்படுகின்றது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அப்போது அந்தப் பிராந்தியமும் உலகும் முன்னொருபோதும் சந்தித்திராத விளைவுகளை சந்திக்க வேணடியிருக்கும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...