முறையான நடைமுறைகளை மீறி பிள்ளைகளை பாடசாலைகளில் அனுமதிப்பதில் ஏதேனும் நிதி முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், கல்விச் செயலாளர் 2,367 மாணவர்களை பிரபல பாடசாலைகளில் முறையற்ற வகையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறாத மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் சேர்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வி அமைச்சின் செயலாளர் மாணவர்களை சேர்ப்பதற்கு 3000 இற்கும் மேற்பட்ட கடிதங்களை வழங்கியுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சில மாணவர்களிடம் முறையான விண்ணப்ப படிவம் கூட இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த கடிதங்கள் பெற்றோருக்கு வழங்கப்படவில்லை எனவும், விண்ணப்பதாரர்களுக்கே கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.