இந்தியாவில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வரும் ஜே.என்.1 தொற்று, கோவா, மராட்டியம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஜெ.என்.1 தொற்று உள்ளது என்பதை உறுதிபடுத்தும் மத்திய அரசின் ஆதாரங்கள் எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில், கோவை புலியங்குளத்தில் காய்ச்சல் பாதிப்பு இருந்த நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஜே.என்.1 வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்ததை அடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,093 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.