சிங்கள- முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டிய சேர் ராசிக் பரீத்!

Date:

மர்ஹும் சேர் ராசிக் பரீத் என்ற உன்னதமான ஒரு மனிதரை நினைவு கூரும் தினமாகும்.

1893ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்த சேர் ராசிக் பரீத் அவர்களின் பிறந்த நாள் இன்றாகும்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து ஒட்டுமொத்த தேசமும் ஆலோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்த மாபெரும் தலைவரின் ஞானம் நம் நினைவுக்கு வருகிறது.

பதவிக்காக அல்லாமல் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நோக்கி சமூகத்தை முன் நிறுத்தியதில் அவர் ஆற்றிய பங்கு ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும்.

சேர் ராசிக் தனது பள்ளி வாழ்க்கையை பம்பலப்பிட்டியில் உள்ள பெர்னாடெட் பள்ளியிலும், பின்னர் மருதானையில் உள்ள மத்ரஸத்துல் சாஹிராவிலும், அதன் பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் தொடங்கினார்.

நாட்டின் அதியுயர் நிர்வாக நிறுவனங்களில் சேவையாற்றிய பெருமைக்குரிய ஒரு சிலரில் சர் ராசிக்கும் ஒருவர்.

அவர் கொழும்பு மாநகர சபையில் நகர பிதாவாகவும், அரச ஆலோசகராகவும், யுத்த சபையின் உறுப்பினராகவும், செனட்டராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார்.

1913 ஆம் ஆண்டு மத்திய முஸ்லிம் இளைஞர் மாநாட்டை ஆரம்பித்து முன்னனியில் இருந்த அவர், இதுவரை காலனித்துவ எஜமானர்களால் மாற்றாந்தாய் முறையில் நடத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மூர் இன மக்களின் விடுதலைக்காக அயராது பாடுபட்டார்.

அந்த மாமனிதர் விசேடமானவராகத்தான் இருக்க வேண்டும். நிச்சயம் அவர் சிரேஷ்ட மனிதர்தான் “சேர் ராசிக் பரித்” என்ற நாமம் இலங்கையின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பதித்துவிட்ட உயரிய நாமமாகும்.

சிரேஷ்ட, நேர்மைமிக்க, நாணயம் நிறைந்த ஒரு நல்ல அரசியல் தலைவர். பதவிகள் மூலம் மகத்தான சேவை செய்தார். அதனால் தான் இத்தலைவர் இன்றும் என்றும் நம் நினைவில் வாழ்கிறார்.

கொழும்பு மாநகரசபை உறுப்பினராக, அரச சபை உறுப்பினராக, இரண்டாம் உலக போர்க் காலத்தில் பாதுகாப்புக் குழு உறுப்பினராக மேலவை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, பிரதி சபாநாயகராக, அமைச்சராக ஈற்றில் வெளிநாட்டுத் தூதுவராக என்றெல்லாம் சேர் ராசீக் பரீத் பதவிகளைப் பெற்று சேவை புரிந்தார்.

கல்வி மேம்பாட்டின் மூலம், குறிப்பாக முஸ்லிம் பெண்கல்வி வளர்ச்சி மூலம், சமூகம், உயர்ச்சி காணுமென கருதிய சேர் ராசிக் பரீத், கொழும்பில் பம்பலப்பிட்டியில் முஸ்லிம் மகளிர் கல்லூரியை உருவாக்கினார்.

தமது சொந்தக் காணியையும், பணத்தையும், கட்டடத்தையும் இக்கல்லூரி உருப்பெறுவதற்கான நன்கொடை செய்தார்.

முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்குவதிலும் இவர் காத்திரமான பணி செய்தார். முஸ்லிம் ஆசிரியர் நியமன விடயத்திலும் ஆர்வமாகப் பணி செய்தார்.

முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களே நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய சேர். ராசீக் பரீத், முஸ்லிம் ஆசிரியர்களின் பயிற்சிக்கான ஆசிரியர் கலாசாலைகள் உருவாக்கப்படுவதிலும் பாடுபட்டார். அட்டாளைச்சேனை, அளுத்கமை ஆகிய இடங்களில் ஆசிரியர் கலாசாலைகள் உருவாகின.

சேர். ராசீக் சுதந்திரப் போராட்டத்தின் விசேஷப் பங்காளிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். முன்மாதிரியான தலைவராக விளங்கிய இவர் முஸ்லிம் ஆசிரியர்களுக்காக முதல் முதலில் தொழிற்சங்கமும் உருவாக்கினார்.

அரபு மொழி போதிப்பதற்காக மெளலவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டுமென 1936ல் அரச சபையில் பிரேரணை கொண்ட வந்த சேர் ராசிக் பரீத்தின் முயற்சியினால் அரபு ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அரபுக் கல்வி அதிகாரிகள் நியமனம் பெற்றனர். பல்கலைக்கழகத்தில் அரபு மொழித்துறை ஆரம்பமானது.

இலங்கை சுதேச மருத்துவ கல்லூரியில் முஸ்லிம்களின் பரம்பரை மருத்துவ முறையான யூனானி மருத்துவ முறையின் வளர்ச்சிக்கும் வழி செய்த இப்பெரியார் யூனானிப் பிரிவையும் உருவாக்கினார்.

இப்பிரிவை மூடிவிட, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சேர் ராசீக்கின் முயற்சியால் அது நிறுத்தப்பட்டது.

இன்று இப்பிரிவு மூலம் யூனானி வைத்திய முறை அரசின் உதவியுடன் புத்துயிர் பெற்றுள்ளது.

கோட்டை தலைநகரில் கம்பீரமாகக் காட்சிதரும் சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் சோனக மக்களின் புகழை நிலைநாட்டிக் கொண்டு மிளிர்கிறது.

அகில இலங்கை சோனகர் சங்கத்தின் தலைவராகவும், முஸ்லிம் கவுன்சிலின் தலைவராகவும் சேர் ராசீக் பரீத் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கது.

‘பல்டிக்நானா’ என்றும் ஒரு காலத்தில் அவர் வர்ணிக்கப்பட்டார். நான் பல்டிக் அடித்ததெல்லாம் சொந்த நன்மைக்கல்ல சமுதாய நன்மைக்கே எனக் கூறி பெருமிதமும் மனநிறைவும் கொண்ட இந்த நேரிய தலைவர் சகல இனத்தவர்களாலும் கெளரவமாக மதிக்கப்பட்டார்.

“சோனக நல் உறவுகளைக் காட்டிவளர்த்த இவர் “சோனக மக்களின் முடிசூடா மன்னராகக் போற்றப்பட்டார்.

இப்பெரியார் நினைவாக உருவான சேர் ராசீக் பரீத் மன்றமும் நீண்ட காலமாக சேர் ராசீக் பரீத் நினைவுகளை நிலைநிறுத்தியே வருகிறது.

இத்தலைவரின் முன்மாதிரியான வாழ்வு வளம் இளம் தலை முறையினருக்கு மகத்தான படிப் பினைகளைப் புகட்டிக் கொண்டே இருக்கும்.

சர் ராசிக் ஃபரீத் தேசிய அரசியல் கட்சிகளுடன் அடையாளப்படுத்தி, வகுப்புவாத அரசியலுக்கு எதிராக தனது மக்களுக்கு வழிவகுத்தார். சாதி, மத, மத பேதமின்றி அனைத்து இன மக்களிடையேயும் ஒற்றுமையை எப்போதும் முன்வைத்தார்.

‘சிங்கள சோனக ஏகமுதுகம’ என்ற கோசத்தின் கீழ் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டிய அவர், முஸ்லிம்கள் தேசியக் கட்சிகளுடன் அடையாளப்படுத்தி, பொதுவான விடயங்களைத் தீர்ப்பதில் பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து நிற்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...