சிறுவர்கள் மத்தியில் சுவாசம் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் தீவிரமடைந்து வருவதாக, சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளாா்.
சுகாதார அமைச்சில் (28) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
பரிசோதனைக்கு உட்படுத்திய சிறவர்களுக்கு இடையில், அநேகமானவர்களுக்கு “இன்புளுவென்சா வைரஸ்” தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொரோனா நோயாளர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த சில தினங்களில் சிறுவர்களின் மத்தியில் சுவாசம் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் பரவலடைந்து வருகின்றன. குறிப்பாக, வைரஸினால் ஏற்படும் காய்ச்சல் நிலைமை அதிகரித்துள்ளது.
அநேகமாக நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சளி, வாந்தி, தலைவலி போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிறுவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அநேகமான காய்ச்சல் நிலைமைகள் “இன்புளுவென்சா ஏ” மற்றும் “பீ” என்பவற்றால் தோற்றம் பெற்றவையாக இருந்தன.
இதற்கு மேலதிகமாக, பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இவ்வாறான நிலைமையை அவதானிக்கவில்லை.
ஆனால், சிறவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அநேகமானவர்களுக்கு “இன்புளுவென்சா” பரவலடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை, சுகாதார பாதுகாப்புக்காக மீண்டும் முகக்கவசம் அணிவது தவறு இல்லை என்று, சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளாா்.
கடந்த கொரோனா பரவல் காலப்பகுதியில், முகக்கவசம் அணிவதால், சுவாச நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள கொள்ள முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், அந்தக் காலப்பகுதியில் சுவாச நோய் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாகவும், அதற்கமைய மீண்டும் முகக்கவசம் அணிவதில் தவறு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கடந்த காலங்களில் பரவலடைந்த காய்ச்சல் காரணமாக, கொரோனா புதிய திரிபு இலங்கைக்குள்ளும் பரவலடைவதற்கு இருக்கும் அச்சுறத்தல் நிலைமை தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டது.
அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட சகல பிரிவுகளுக்கும் அறிவித்து, உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோய் நிலைமை தொடர்பில், தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், கடந்த காலம் முழுவதும் சிறந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், நாட்டில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
– ஐ. ஏ. காதிர் கான்