எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஜனவரி மாத மின் கட்டணத் திருத்தத்தில் VAT எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.
“உத்தேச புதிய மின்சக்தி சட்ட மூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது பல்வேறு ஆலோசனைகள் எமக்கு கிடைத்து வருகின்றன.
உத்தேச புதிய மின்சக்தி சட்ட மூலம் தொடர்பில் ஆர்வமுள்ள தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மின்சார நுகர்வோர் உள்ளிட்ட எந்தவொரு தரப்பினரும் தமது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம்.
அந்தக் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இன்று முதல் ஜனவரி 03 ஆம் திகதி வரை எழுத்து மூலம் எமக்கு சமர்ப்பிக்கலாம்.
உத்தேச புதிய சட்ட மூலம் மின்சக்தித் துறையின் மறுசீரமைப்புகளுக்கும் எதிர்காலத்தை வலுப்படுத்தக்கூடிய சட்ட மூலமாக மாற்ற முடியும்.
அந்த வகையில் அனைத்து தரப்பினரும் வழங்கும் ஆலோசனைகளைக் கவனத்திற்கொண்டு தயாரிக்கப்படும் சட்டமூலத்தை ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கிறோம்.
மேலும், மின் கட்டணத்தை ஜனவரியில் திருத்தம் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதிகபட்ச திறனில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்திக்கு ஏற்படும் அதிக செலவைக் கருத்தில் கொண்டே ஒக்டோபர் மாதத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போது காலநிலை மாறியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்து வருவதாலும், மழை இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாலும், மின் கட்டணத்தைத் திருத்த முடியும் என இலங்கை மின்சார சபை எமக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதத்தில் உள்ள CEB கையிருப்யைக் கருத்தில் கொண்டு, ஜனவரியில் நடைபெறவுள்ள அடுத்த கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என நாம் நம்புகிறோம் என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.