இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறப்புரிமைக் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 இற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவினால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கையினை முத்திரையிடுமாறு யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்படாமல் சிறப்புரிமைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினால் குற்றம் சாட்டப்பட்டது.
இதன்படி, குறித்த அறிக்கை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
அத்துடன், பிரதி சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையினை சபையில் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டது.
தொடர்ந்து, சபையில் வாதப்பிரதிவாதம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த நிலையில், பிரதி சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையினை தாமே சிறப்புரிமைக் குழுவிற்கு வழங்கியதாகவும், அதுகுறித்து தொடர்ந்து பேசுவதில் பிரயோசனம் இல்லை எனவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.