நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு அடுத்தடுத்த சறுக்கல்கள் ஏற்பட்டது.
உடல்நிலை பாதிக்கப்படவே வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விஜயகாந்த் அதில் இருந்து மீண்டார். அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வந்தார் விஜயகாந்த்.
கடந்த மாதம் 18ம் தேதி சென்னை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் அவருக்கு சளி, இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற விஜயகாந்த் பூரண குரணமடைந்தார்.
இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார் விஜயகாந்த். அவரது உடல்நிலையை பார்த்து தொண்டர்கள் கண்ணீர் விட்டனர்.
இந்நிலையில் தான் செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த்தின் மறைவு செய்தி கேட்டு தேமுதிக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.