புத்தளம் கல்பிட்டி நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த ஒளி விழா நிகழ்வானது வெள்ளிக்கிழமை (15) அதிபர் பீ.ஜெனற்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தேத்தாப்பளைப் பங்கின் அருட் சகோதரர் அருட்பணி பிரசங்க அடிகளார், புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரி ஜெனற் றொற்றிக்கோ பிள்ளை, புத்தளம் வலய கல்வி பணிமனையின் பணிப்பாளர் ஏ.எச்.எம். அர்ஜுனா, புத்தளம் வலய கல்வி பணிமனையின் கல்வி நிர்வாகப் பிரிவின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி சீ.ஐ. சுஜுவிகா, கணக்காளர் டபில்யூ.ஏ.எம்.பீ.கே.எல்.வணசிங்க, ஆரம்பப் பிரிவு பாட இணைப்பாளர் வீ.அருணாகரன், அயல் பாடசாலை அதிபர்கள், பிரதேச கல்வி சார், கல்வி சாரா ஊழியர்கள் அனைவரினதும் பங்கேற்புடன் இவ்விழாவானது சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது ‘நறுமணம் ‘ சஞ்சிகையின் இதழ் 4 அதிபரினால் வெளியீடு செய்யப்பட்டு அதற்கான நூல் ஆய்வு புத்தளம் பாத்திமா பாலிகா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி யோகேஸ்வரி அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
பின்னர் ஒளி விழா நிகழ்வுகள் அரங்கேறின. இந்நிகழ்வின் போது புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அதிபரினால் பொன்னாடை போர்த்தப்பட்டது.
மேலும், தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களினதும் இப்பாடசாலை அதிபர், ஆசிரியர்களினதும் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
(எம்.யூ.எம்.சனூன்)