பேச்சு சுதந்திரம் : அமெரிக்காவில் பலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்களுக்கு அது கிடையாது- லத்தீப் பாரூக்

Date:

அமெரிக்காவில் அரசியல்வாதிகளையும், தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஜனாதிபதிகளையும் உருவாக்குபவர்களும் இல்லாமல் ஆக்குபவர்களும் யூதர்களே.

இஸ்ரேலின் உருவாக்கத்தின் போது பயங்கரவாதத்தின் ஞானத் தந்தையாகவும் 1980களின் ஆரம்ப கட்டத்தில் இஸ்ரேலின் பிரதமராகவும் இருந்து பிற்காலத்தில் நோபள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட மெனாச்சம் பெகின் ஒருமுறை “வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கான பாதை டெல் அவிவ் வழியாகவே செல்கிறநது” என்று கூறினார்.

இன்றும் இதே நிலைதான் நீடிக்கின்றது. தற்போது காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளை அமெரிக்காவின் இன்றைய ஜனாதிபதி ஜோ பைடன் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில் இருந்தே இது தெட்டத் தெளிவாகப் புரிகின்றது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ராஷிதா தாலிப் காஸாவில் இனப்படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். இவ்வாறான கருத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்த ஒரேயொரு உறுப்பினர் அவர்தான்.

ஆனால் அந்த ஒரே காரணத்துக்காக அவர் மீது கண்டனம் தெரிவித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்களை கையாளும் விதத்தை ராஷிதா வன்மையாக சாடினார்.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கி வரும் வருடாந்த இராணுவ உதவிகளான 3.8 பில்லியன் டொலர் உதவிகள் உட்பட ஏனைய உதவிகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என அவர் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பத்தி எழுத்தளர் அஸாட் ஈஸா என்பவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் அக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது முதல் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையால் கண்டிக்கப்பட்டுள்ள ராஷிதா தாலிப்

ஹாவார்ட், கொலம்பியா, யேல் போன்ற முக்கிய பல்கலைக்கழகங்கள் உட்பட ஏனையவற்றிலும், காஸாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கர தாக்குதலுக்கு எதிராக தாம் கருத்து தெரிவிக்க எடுத்த முயற்சிகள் யூத எதிர்ப்பு கருத்துக்களோடு ஒன்றிணைந்துள்ளதாகக் கூறி பாரதூரமான விதத்தில் நசுக்கப்பட்டன என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் யுத்த நிறுத்தம் ஒன்று அமுல் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் முன்வைத்த கருத்துக்கள் கூட தம்மை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் குடும்பங்கள் தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டதோடு, அவர்களது தொழில்கள் சம்பந்தமான எதிர்காலத் திட்டங்களும் நாசமாக்கப்படம் என அச்சுறுத்தல்கள் விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை, அமெரிக்க ஊடகங்கள் எவ்வாறு நியாயப்படுத்தி உள்ளன என்பது பற்றி பத்தி எழுத்தளர் கிரிகரி சுபாக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தாராளவாத போக்குடைய முன்னணி பத்திரிகைகள் பலவற்றின் அண்மைக்கால ஆசிரிய பீட கருத்துக்கள், கொஞ்சம் கூட தளராமல் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இழைத்த மிகப் பெரிய அளவிலான பயங்கர தாக்குதல்களை, சட்டபூர்வமானவை என்று தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வருகின்றன.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களையும் அவற்றுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி ஆதரவுகளையும் பல ஊடகங்கள் நியாயப்படுத்தி அனுமதித்துள்ளன.

மிகவும் அமைதியான தொணியில் வெளியிடப்படும் பலஸ்தீன ஆதரவு கருத்துக்களைக் கூட அவை கண்டித்துள்ளன.

இஸ்ரேலின் தாக்குதல்கள் அறம் சார்ந்தவை என்று அமெரிக்க வெளியீடுகள் பல மீண்டும் மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல்கள் பலஸ்தீன மக்களை அழித்த போதிலும் கூட அந்த மக்கள் மீது இவர்களது தாராளப் போக்கு காட்டப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த யுத்தம் தொடர்பான அமெரிக்க ஊடகங்கள் பலவற்றின் தகவல் சேகரிப்புக்கள் மற்றும் தொகுப்புக்கள், எதிர்ப்பார்த்தபடியே பைடன் நிர்வாகத்தின் சந்தேகத்துக்கு இடமற்ற இஸ்ரேல் ஆதரவு போக்கை சார்ந்தே காணப்பட்டன. அரபு மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளாகள் ஒலி ஒளிபரப்புக்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதையும் நாம் காண முடிகின்றது.

பல பிரதான செய்தி நிறுவனங்களால் அவர்கள் இப்போது ஓரம் கட்டப்பட்டுள்ளனர். அமெரி;காவின் பிரதான செய்திச் சேவை ஒன்றின் மிகவும் பிரபலமான விருதுகள் பல வென்ற ஊடகவியலாளர்கள் கூட இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் பற்றியோ அல்லது பலஸ்தீன மக்களின் நியாயமான அடிப்படை மனித உரிமைகள் பற்றியோ தாங்கள் எதுவும் பேசினால், தமது தொழில் பாதிக்கப்படலாம் என அச்சமும் கவலையும் வெளியிட்டுள்ளனர்.

காஸாவின் இன்றைய நிலை பற்றி அமிரா அபு அல் பத்தாஹ் என்ற பத்தி எழுத்தாளர் குறிப்பிடுகையில் “ஐக்கிய நாடுகள் முன்னாள் அதிகாரி ஒருவர் இனஒழிப்பு படுகொலை பற்றிய ஒரு பாடப்புத்தக உதாரணம் என்று முன்னர் இதை குறிப்பிட்டார்.

தமது இல்லங்களில் வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி குடியிருப்பாளர்களின் தலைகளுக்கு மேலாக குண்டு வீசுவதை இஸ்ரேல் ஒருபோதும் நிறுத்தவில்லை. பாடசாலைகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், தென் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு தேடி இடம்பெயர்ந்த வாகனத் தொடர்கள் என எல்லாவற்றையும் அவர்கள் இலக்கு வைத்தார்கள்.

இவை எல்லாமே ஆக்கிரமிப்பு அரசின் அறிவுறுத்தல் படியே நடந்தன. ஜபாலியா அகதி முகாம் அடியோடு அழிக்கப்பட்டது. இதனால் மக்கள் தமது வாழ்நாளில் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘இது என்னவகையான ஜனநாயகம்.

மக்கள் காட்டுமிராண்டித் தனமான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அல்லவா வாழுகின்றனர். பல்கலைக்கழகங்கள் கூட நாசமாக்கப்பட்டு விட்டன.

நீங்கள் பலஸ்தீன மக்களை கொலை செய்வதற்கு முன் அவர்களுக்கு குறைந்த பட்சம் உணவும் குடிநீருமாவது கொடுத்திருக்க வேண்டாமா?” என்று எழுதி உள்ளார்.

ஹாவார்ட் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம்

பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வாழும் மக்கள், சுற்றி உள்ள அரபுலக சர்வதிகாரிகளால் கைவிடப்பட்டதால் தமது உயிரையும் இரத்தத்தையும் இன்று விலையாக கொடுத்த வண்ணம் உள்ளனர்.

தமது கண்ணெதிரே நடக்கும் கொடூரமான படுகொலைகளை அரபுலக ஆட்சியாளர்கள் கைகட்டி வாய்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்றைய நிலைக்கு அவர்கள் அக்டோபர் 7ல் ஆரம்பிக்க்பட்ட அல்அக்ஸா வெள்ளம் இராணுவ நடவடிக்கையை குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

என்னமோ வரலாற்றில் அன்று தான் முதல் தடவையாக தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது போல் அவர்கள் பேசுகின்றனர். 75 வருடகால அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் அவர்களுக்கு மறந்து போய்விட்டது.

75 வருட காலமாக எதுவுமே நடக்காததது போல் அவர்கள் பேசுகின்றனர். இந்த சர்வாதிகரிகள் மேற்குலகில் உள்ள அவர்களின் எஜமானர்களின் குரலாகவே எதிரொலிக்கின்றனர்.

1940களில் சியோனிஸ பயங்கரவாத குழுக்களின் ஆதரவோடு இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்ட பின் இதுவே முதல் தடவையாக அந்த இனவாத நாடு பெருமளவான தனது பிரஜைகளை இழந்துள்ளது.

இதுவே முதல் தடவையாக பலஸ்தீன போராளிகளால் பெருளமளவான இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாகம் பிடிக்க முடிந்துள்ளது. இவர்களில் படை வீரர்களும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் அடங்குவர்.

இஸ்ரேல் தொடர்ந்து நூற்றுக் கணக்கான பலஸ்தீனர்களை சிறைபிடித்து எந்த விதமான குற்றச்சாட்டுக்களும் விசாரணைகளும் இன்றி தடுத்து வைத்து வருகின்றது.

காஸா மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான குண்டு வீச்சு தாக்குதல்களைக் கணடித்து உலகம் முழுவதும் பல பிரதான நகரங்களில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நகரங்களிலும் இவை இடம் பெற்றுள்ளன. மீண்டும் ஒரு தடவை மேலைத்தேச அரசுகளின் நயவஞ்சகத் தனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்காகவும் சட்டத்தின் ஆட்சிக்காகவும் இவர்கள் எழுப்புகின்ற உரிமைக் குரல்கள் போலியானதும் வெட்கக் கேடானதும் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீனர்களின் கண்ணோட்டத்தில் இருந்து இந்த மோதல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள மிக முக்கியமான விடயம் இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளன என்பதாகும்.

அது ஒரு சக்தி மிக்க இராணுவம் என்று கட்டி எழுப்பப்பட்ட மாயையை இனிமேலும் நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. இதை விட வேறு என்னதான் வேண்டும்? முன்னர் உலகின் பிரதான ஊடகங்களுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் புகழ் பாட நேரம் போதாமல் இருந்தது.

அதற்காகவே ஒரு திறந்த வெளியை அவை அமைத்திருந்தன. ஆனால் இப்போது சமூக ஊடகங்களின் வளர்ச்சி அவற்றின் அளப்பரிய தாக்கம் என்பன காரணமாக பலஸ்தீன கண்ணோட்டத்தையும் உலகம் முழுவதும் பார்க்கவும் கேட்கவும் கூடியதாக உள்ளது. கருத்துப் பரிமாறல்களும் இப்போது மாறி வருகின்றன.

பலஸ்தீன விடயங்கள் இப்போது உலக ஊடகங்களின் முதல் பக்கத்தை அலங்கரிக்கத் தொடங்கி உள்ளன. அவை எல்லோரும் கவனம் செலுத்தும் முக்கிய விடய்ங்களாக மாறி உள்ளன.

இந்தப் பின்னணியில் ஆபிரஹாமின் உடன்படிக்கைகள் தாக்கு பிடிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்தள்ளது.

சியோனிஸ்ட்டுகளின் பொம்மைகளாக ஆட்சி பீடங்களை அலங்கரிக்கும் அரபுலக மன்னர்கள் வேண்டுமானால் இந்த உடன்படிக்கைகளை இன்னமும் நம்பலாம். ஆனால் மக்கள் நம்புவார்களா? அக்டோபர் 7ல் தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல் அடக்கி ஆளப்படும் எல்லா மக்களுக்கும் ஒரு புது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

உண்மையில் இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான யுத்தம் அல்ல. இஸ்ரேலிடம் மிக நவீனமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தொழில்நுட்பங்கள் என்பன உள்ளன.

இவற்றுக்கு மேலாக மேற்குலக யுத்த வெறியர்கள் இந்த இன ஒழிப்பு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தத் தேவையான சகல உதவிகளையும் வழங்க வரிசையில் நின்றன. ஆனால் காஸா போராளிகளால் உள்ளுரில் தங்களால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களிலேயே பெரும்பாலும் தங்கி இருந்தனர்.

அவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது காஸா மக்கள் அந்தப் போராளிகள் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத ஈடு இணையற்ற நம்பிக்கையும், அவர்களின் மனோவலிமையும் ஆகும்.

இன்று இந்தக் கரையோர சிறு நில பரப்பானது மத்திய கிழக்கின் உந்து விசையை மட்டும் அன்றி முழு உலகின் இயக்க வலுவையும் மாற்றி உள்ளது.

ஐரோப்பிய சபையின் தலைவர் சார்ள்ஸ் மிச்சல் பலஸ்தீன இஸ்ரேல் மோதல்களுக்கு தீர்வாக இருநாட்டு தீர்வு முறையை கவனத்தில் கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவித்து விட்டார்.

ஐரோப்பிய சபைக்கு இதுவே மிகவும் முன்னுரிமை வாய்ந்த விடயமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் வாரங்களில் ஐரோப்பிய சபை இந்த விடயம் பற்றி ஆராய சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...