சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு “லன்ச் ஷீட்” பயன்பாட்டிற்கு தடை விதிக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் கூடிய சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில் லன்ச் ஷீட் பாவனையால் ஏற்படும் சுற்றுச் சூழல் கேடு குறித்தும், “phthalates” என்ற புற்று நோய் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்றது.
இதன்படி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, லன்ச் ஷீட்டை பயன்பாட்டிலிருந்து நீக்கி மாற்று வழிகளை அறிமுகப்படுத்த 6 மாத கால அவகாசம் அளித்து தடை செய்ய உரிய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் சேகரிக்கும் பொறுப்பை, அவற்றை தயாரித்து விநியோகம் செய்பவருக்கு வழங்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பல்வேறு நுகர்வுத் தேவைகளுக்காக விநியோகிக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய QR குறியீட்டைப் பயன்படுத்தி மீள்சுழற்சிச் செயலில் சேர்க்கப்படுகிறதா என்பதைக் கண்டறியும் அமைப்பு ஒன்றைத் தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதற்கு அதிக திறன் கொண்டதாக மாற்றும் வகையில் காலி போத்தல்களுக்கு கணிசமான தொகை வழங்கப்பட வேண்டுமென குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உபகரணங்கள் மற்றும் பொருட்களைக் கண்டறிந்து பட்டியலிட்டு, அது தொடர்பில் குழுவிடம் அறிக்கை வழங்குமாறும் பிரிவு கண்காணிப்புக் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.