இலங்கை வெளிவிவகார சேவைக்கு 75 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு ராஜதந்திரிகள் பஸார் மற்றும் கலாச்சார கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு 07 இலுள்ள குட் மார்கட் (Good Market) வளாகத்தில் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள தூதுவராலய மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களைச் சேர்ந்த இராஜதந்திரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளினதும் கலாச்சார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதோடு பல்வேறு நாடுகளினதும் உணவு நிலையங்களும் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்களும் நிறுவப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியின் ஊடாகப் பெறப்பட்ட வருமானம் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நரம்புச் சிகிச்சைத் திட்டத்துக்கு வழங்கப்பட்டது.
இவ்வாண்டு நடைபெற்ற இராஜதந்திரிகள் பஜாரில் அமையப் பெற்றிருந்த சவூதி விற்பனையகத்தில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய காட்சிப் பொருட்களுக்கு அதிக கேள்வி இருந்ததாக இலங்கைக்கான வூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார்.
சவூதி அரேபிய தயாரிப்புகள் உட்பட, பிரபலமான சவூதி உணவுகளும் காணப்பட்டமையால் அங்கு வந்த பார்வையாளர்கள் அவற்றை நுகர்வதில் பெரும் ஆர்வம் காட்டியதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் உள்ள சவூதி தூதரகம் எதிர்காலத்திலும் இவ்வாறான பஜார்களிலும், இவ்வாறான தொண்டாற்றும் செயற்பாடுகளிலும் பங்குபற்றவுள்ளதாக அவர் தெரிவித்தார்.