இலங்கையிலுள்ள உலமாக்களை ஊடகம் சார்ந்த துறையில் வளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பூரண ஏற்பாட்டில் பஹன அகடமியுடன் இணைந்து கொழும்பிலுள்ள அல்-ஷபாப் நிறுவனத்துடைய அனுசரணையுடன் ஏற்பாடு செய்த இரண்டு நாள் ஊடகக் கருத்தரங்கும் செயலமர்வும் மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் உள்ள வில்பொல ஜும்ஆ பள்ளிவாசலின் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் 42 உலமாக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றதோடு வளவாளர்களாக ‘நியூஸ்நவ்’ செய்தி இணையத்தளத்தின் பிரதம ஆசிரியரும் மீள்பார்வை பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான பியாஸ் மொஹமட், சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹுஸைன், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் பஹன அகடமியின் பணிப்பாளருமான ஹில்மி முஹம்மத், அஷ்ஷெய்க் எம்.எம்.பஸ்லூர் ரஹ்மான் நளீமி, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை தயாரிப்பாளர் அஷ்ஷெய்க் இஸ்பஹான் ஷராப்தீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு இந்த கருத்தரங்கை மிகச்சிறப்பாக வழிநடாத்தினார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்வில் இறுதி அம்சமாக நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஷட் ஏ. பைசல் அவர்களும் பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் மற்றும் ‘நியூஸ்நவ்’ செய்தி இணையத்தளத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் அவர்களும் சபுமல் நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல சமூக சேவையாளருமான அல்ஹாஜ் கமால்தீன் அவர்களும் கேகாலை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மற்றும் அதன் செயலாளர், கேகாலை மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர், இந்த பெறுமதி வாய்ந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு வகையில் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கிய வில்பொல பள்ளிவாசலின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், உட்பட அனுசரணை வழங்கிய கொழும்பு ஜம்மியதுல் ஷபாப் நிறுவனத்துடைய பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாசிம் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியோடு கலந்துகொண்டோர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
உண்மையில் இந்த நிகழ்ச்சி கோகலை மாவட்ட உலமாக்களுக்கு மத்தியில் மிக பயனுள்ள நிகழ்வாக அமைந்தாக அதில் கலந்துகொண்ட உலமாக்கள் தெரிவித்ததோடு இவ்வாறு காலத்துக்கு தேவையான பொருத்தமான நிகழ்ச்சிகளை தொடர்ந்தும் உலமாக்களுடைய திறன் விருத்திக்காகவும் அவர்களுடைய பங்களிப்பை சமூகத்தில் கூட்டுவதற்காகவும் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளையும் அங்கிருந்த பலரும் முன்வைத்தனர்.
இதேவேளை பஹன மீடியாவின் துணை நிறுவனமான ‘நியூஸ் நவ்’ செய்தி இணையத்தளம் அதனுடைய 5ஆவது ஆண்டு பூர்த்தியை இந்த வருடம் கொண்டாடிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.